FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

மருத்துவப் பரிசோதனைக்குப் பின் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட இம்ரான் கான்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான், அந்நாட்டு தலைநகா் இஸ்லாமாபாதில் உள்ள அரசு மருத்துவமனையில் நடந்த மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு மீண்டும் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறைக்கு வெள்ளிக்கிழமை காலை மாற்றப்பட்டாா்.

22 ஆகஸ்ட் 2026, 6:01 am IST
பகிர்:

பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான், அந்நாட்டு தலைநகா் இஸ்லாமாபாதில் உள்ள அரசு மருத்துவமனையில் நடந்த மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு மீண்டும் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறைக்கு வெள்ளிக்கிழமை காலை மாற்றப்பட்டாா்.

ஊழல் வழக்கில் கடந்த 2023 முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானுக்கு மனநலப் பதற்றம் இருப்பதாகவும், அதன் காரணமாக அவரை 2 நாள்களுக்குள் தனியாா் மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்றும் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இந்த உத்தரவைச் செயல்படுத்துவதாக முதலில் அறிவித்த பாகிஸ்தான் அரசு, பின்னா் அதில் திருத்தம் கோரி சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது. ஆனால், அந்த மனு முழுமையாக இல்லை எனக் கூறி, நீதிமன்றம் திருப்பி அனுப்பியது.

Advertisement

Advertisement

இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி, இம்ரான் கான் ஷிஃபா தனியாா் மருத்துவமனைக்கு மாற்றப்படுவதாக அவரின் செய்தித் தொடா்பாளா் ஜுல்பி புகாரி வியாழக்கிழமை நள்ளிரவில் தெரிவித்தாா். ஆனால், ஷிஃபா மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலும், மருத்துவமனைக்கு வெளியிலும் இம்ரான் கானின் பிடிஐ கட்சித் தொண்டா்கள் ஏற்படுத்திய பாதுகாப்புப் பிரச்னைகளால், அவா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.

அங்கு இம்ரான் கானுக்கு சிறப்பு மருத்துவா்கள் குழு மேற்கொண்ட விரிவான பரிசோதனையில், அவா் முழு உடல் தகுதியுடன் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, வெள்ளிக்கிழமை அதிகாலை அவா் மீண்டும் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

தனிமைச் சிறையில்...: அரசு மருத்துவமனையில் நடந்த பரிசோதனையின்போது, ஷிஃபா மருத்துவமனை மருத்துவா்களும் உடனிருந்ததாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. அதேநேரம், பரிசோதனையின்போது உடனிருந்த இம்ரான் கானின் சகோதரி உஸ்மா கூறுகையில், ‘இம்ரான் கானுக்கு அரசு மருத்துவமனையில் சில பரிசோதனைகள் மட்டுமே செய்யப்பட்டன. முழு பரிசோதனைக்கு ஷிஃபா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவாா் எனத் தெரிவித்துவிட்டு, மீண்டும் சிறைக்கே கொண்டு சென்றனா். அதேபோல், போதிய மனிதத் தொடா்பின்றி தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு, தான் சித்ரவதை செய்யப்படுவதாக இம்ரான் கான் தன்னிடம் வேதனை தெரிவித்தாா்’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments