குழந்தைகளின் தனியுரிமை விவகாரத்தில் அமெரிக்க நீதித்துறையுடன் சமரசம்: டிக்டாக் செயலிக்கு ரூ.3,828 கோடி அபராதம்!
டிக்டாக் நிறுவனம் அமெரிக்க நீதித்துறையுடன் 400 மில்லியன் டாலர் (சுமார் ரூ.3,828 கோடி) இழப்பீடு வழங்குவதற்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது குறித்து...
வாஷிங்டன்: குழந்தைகளின் இணையதள தனியுரிமை தொடர்பான பாதுகாப்புச் சட்டத்தை மீறியதாகத் தொடரப்பட்ட வழக்கை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், சீனாவைச் சேர்ந்த பொழுதுபோக்கு செயலியான டிக்டாக் நிறுவனம் அமெரிக்க நீதித்துறையுடன் 400 மில்லியன் டாலர் (சுமார் ரூ.3,828 கோடி) இழப்பீடு வழங்குவதற்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
13 வயதுக்குட்ட குழந்தைகள், செயலிகளைப் பயன்படுத்தும் முன்னர் பெற்றோரிடம் அனுமதி பெற வேண்டியது அமெரிக்கச் சட்டப்படி அவசியம். ஆனால் அதை டிக்டாக் செயலி கடைபிடிக்கவில்லை.
குழந்தைகளின் பெற்றோர் அனுமதியின்றி அவர்களின் மின்னஞ்சல், இருப்பிடம் போன்ற பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை சேகரித்ததாக 2024 இல் அமெரிக்க அரசு டிக்டாக் செயலி மற்றும் அதன் சீனாவைச் சேர்ந்த தாய் நிறுவனமான 'பைட்டான்ஸ்' மீது வழக்குத் தொடர்ந்தது.
Advertisement
Advertisement
மேலும், தங்கள் குழந்தைகளின் கணக்குகளை நீக்க விரும்பிய பெற்றோரின் கோரிக்கைகளை இந்த நிறுவனங்கள் நிறைவேற்றத் தவறியதாகவும், 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குச் சொந்தமான கணக்குகள் என்று தெரிந்தும் அவற்றை நீக்காமல் சட்டத்துக்கு உட்பட்டு நடக்கவில்லை என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
2019 இல் இதேபோன்ற குற்றச்சாட்டின் கீழ் மியூசிக்கலி செயலி நிறுவனம் 5.7 மில்லியன் டாலர் அபராதம் செலுத்தியது.
இந்த நிலையில், இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், டிக்டாக் செயலி நிறுவனம் அமெரிக்க நீதித்துறையுடன் 400 மில்லியன் டாலர் (சுமார் ரூ.3,828 கோடி) இழப்பீடு வழங்குவதற்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
டிக்டாக் செயலி நிறுவனம் உடனடியாக 300 மில்லியன் டாலரையும், அதன் முந்தைய நிறுவனமான 'மியூசிக்கலி செயலி' மீதான முந்தைய உத்தரவு ரத்து செய்யப்பட்ட பிறகு கூடுதல் 100 மில்லியன் டாலரையும் செலுத்தும் என்று அமெரிக்க நீதித்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
மிகப்பெரிய வெற்றி
"இந்த சமரச ஒப்பந்தம் அமெரிக்க குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய வெற்றியாகும்" என்று அமெரிக்க இணை அட்டர்னி ஜெனரல் ஸ்டான்லி இ. உட்வார்ட் ஜூனியர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் இணையத்தில் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதும், அவர்களின் தனிப்பட்ட தகவல்களைக் கையாளும் நிறுவனங்கள் தங்கள் சட்டப்பூர்வ கடமைகளை நிறைவேற்றுவதை உறுதி செய்வதும் நீதித்துறையின் முன்னுரிமையாகும்.
இந்தத் தீர்வு கணிசமான தொகையை மீட்டெடுப்பதுடன், குடும்பங்கள் எதிர்பார்க்கும் மற்றும் பெறத் தகுதியான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் வலுப்படுத்துகிறது.
நீதித்துறை வழக்கு தொடர்ந்ததில் இருந்து, டிக்டாக் நிறுவனம் முக்கிய மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது; குறிப்பாக அதன் அமெரிக்கப் பிரிவின் உரிமையாளர் கட்டமைப்பில் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஜனவரியில், புதிய 'டிக்டாக் யுஎஸ்' கூட்டு முயற்சியை உருவாக்க, ஆரக்கிள், சில்வர் லேக் மற்றும் எமிரேட்டி முதலீட்டு நிறுவனமான எம்ஜிஎக்ஸ் உள்ளிட்ட முக்கிய முதலீட்டாளர்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டது.
குழந்தைகளின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பாக ஏராளமான வழக்குகளைச் சமூக வலைதள நிறுவனங்கள் எதிர்கொண்டு வரும் சூழலிலும், பல நாடுகள் சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினர் சமூக ஊடக செயலிகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்து வரும் சூழலில் டிக்டாக் செயலியின் இந்த ஒப்பந்தம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
நீண்ட சட்டப் போராட்டத்தை தவிர்க்கவும், அமெரிக்க பயனர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தவே இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் டிக்டாக் செயலி தன் மீதான சட்டப்பூர்வமான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ளாமல் வழக்கை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது.
அமெரிக்காவில் இந்த தடையை போக்குவதற்கு, டிக்டாக் செயலி தனது வயது சரிபார்ப்பு முறைகளை பயன்படுத்தி உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான 'மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ்', 1998 இல் குழந்தைகளின் இணைய தனியுரிமைப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் பல்வேறு மாகாண சட்டங்களை மீறிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக கலிபோர்னியாவின் ஓக்லாண்டில் உள்ள நீதிமன்றத்தில் தற்போது விசாரணையை எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
TikTok has reached a USD 400 million settlement with the US Department of Justice
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.