நேபாளத்தில் திடீர் வெள்ளம்: பலி 669 ஆக உயர்வு
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு.....
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 669-ஆக உயர்ந்துள்ளது.
நேபாளத்தில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை 4ஆவது நாளாக முழுவீச்சில் மீட்புப் பணிகள் தொடா்ந்தன. மேலும் உடல்கள் மீட்கப்பட்டதைத் தொடா்ந்து, பலியானோர் எண்ணிக்கை 669-ஆக உயர்ந்துள்ளது. 2,000க்கும் மேற்பட்டோர் இன்னமும் மாயமாகியுள்ளனர்.
காணாமல் போனவர்களைக் கண்டறியவும், வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு உதவவும் உள்ளூர் மக்கள் மற்றும் பிற முகமைகளுடன் காவல் துறை ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். புதன்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கையடுத்து, நேபாளத்தில் இதுவரை 88 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
இது குறித்து வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரண்தீா் ஜெய்ஸ்வால் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், 88 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 287 இந்தியர்கள் காணாமல் போயுள்ளதாகத் தகவல்கள் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், பிற நாடுகளின் குடியுரிமை பெற்ற சுமார் 128 இந்திய வம்சாவளியினரும் இன்னமும் மாயமாகியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ரசுவா பகுதியில் உள்ள நீர்மின் திட்டத்திலிருந்து இன்று 4 இந்தியர்கள் மீட்கப்பட்டதாக ஜெய்ஸ்வால் தெரிவித்தார். அதோடு, சீனாவிலிருந்து 120 இந்தியர்கள் இன்று நேபாளத்திற்குள் வந்து சேர்ந்துள்ளதாகவும் அவர் கூட்டினார். திபெத் பகுதியில் இருந்து நேபாளத்தின் போடே கோஷி நதியில் கடந்த புதன்கிழமை பாறைகள், சகதியுடன் பெருக்கெடுத்த வெள்ளம், திரிசூலி, நாராயணி ஆகிய நதிகளிலும் பாய்ந்தது.
இதன் காரணமாக ரசுவா, நுவாகோட், தாடிங், சிட்வான் உள்ளிட்ட மத்திய மாவட்டங்களில் கரையோர வீடுகள், கட்டடங்கள், பாலங்கள், நீா் மின் நிலையங்கள், பிற உள்கட்டமைப்புகள் அடித்துச் செல்லப்பட்டன. திபெத்தில் பனிப்பாறை சரிவால் லிண்டே நதியில் நீரோட்டம் தடுக்கப்பட்டு, பின்னா் அது உடைந்ததால் பெருவெள்ளம் ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது.
The death toll from devastating flash floods in Nepal and Tibet has risen to 669, with more than 2,000 people still missing.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.