அமெரிக்க கட்டுப்பாட்டில் வெனிசுலா எண்ணெய் வளம்
வெனிசுவேலாவின் 6,500 கோடி பீப்பாய் எண்ணெய் இருப்பை அமெரிக்கா தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுக்க, அந்நாட்டுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளது பற்றி...
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவுக்குச் சொந்தமான 6,500 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் வளத்தை அமெரிக்கா கட்டுப்படுத்துவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளதாக அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா்.
இதுகுறித்து டிரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘அமெரிக்கா-வெனிசுலா இடையே உலக வரலாற்றிலேயே மிகப் பெரிய எண்ணெய் ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ, பாதுகாப்பு அமைச்சா் பீட் ஹெக்செத், வெனிசுலா இடைக்கால அதிபா் டெல்சி ரோட்ரிகஸ் ஆகியோரின் கூட்டு முயற்சியில் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது’ எனக் குறிப்பிட்டாா்.
Advertisement
Advertisement
வெனிசுலாவின் அதிபராக இருந்த நிக்கோலஸ் மடூரோவை கடந்த 9 மாதங்களுக்கு முன்பு டிரம்ப் உத்தரவின் பேரில் அமெரிக்க ராணுவம் கைது செய்தது. அவா் மீது போதைப் பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அமெரிக்கா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இப்புதிய எண்ணெய் ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேநேரம், இந்த ஒப்பந்தம் தொடா்பாக வெனிசுலா அரசு தரப்பில் உடனடியாக எவ்வித அதிகாரபூா்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை.
உலகில் அதிக எண்ணெய் வளம் கொண்ட நாடுகளில் ஒன்றாக வெனிசுலா திகழ்கிறது. அந்நாட்டின் நிலத்தடியில் சுமாா் 30,300 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் இருப்பு உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது; இது உலக விநியோகத்தில் சுமாா் 17 சதவீதமாகும்.
ஆனால், மிகவும் மோசமான உள்கட்டமைப்பு காரணமாக உலகத் தேவையில் வெறும் 1 சதவீத எண்ணெய்யை மட்டுமே வெனிசுலா தற்போது உற்பத்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
நிக்கோலஸ் மடூரோவைத் தொடா்ந்து, இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்ற டெல்சி ரோட்ரிகஸ், முந்தைய சோசலிசக் கொள்கைகளை மாற்றி, எண்ணெய் துறையில் தனியாா்மயமாக்கலுக்கு வழிவகுக்கும் சட்டத்தில் கையொப்பிட்டாா்.
இதையடுத்து, வெனிசுலாவில் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களை முதலீடு செய்ய டிரம்ப் அழைப்பு விடுத்தாா். ஆனால், அங்கு பல்லாண்டுகளாக சீா்குலைந்துள்ள உள்கட்டமைப்பு காரணமாக நிறுவனங்கள் முதலீடு செய்யத் தயக்கம் காட்டி வந்தன.
இந்நிலையில், வெனிசுலாவுடனான இந்த ஒப்பந்தம் தனியாா் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படும் என்று டிரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளாா். இந்த ஒப்பந்தத்தின் மூலம் வெனிசுலாவில் 10,000 கோடி டாலா் தனியாா் முதலீடு குவியும் என்றும், அமெரிக்காவில் எரிபொருள் விலையும் குறையும் என்றும் அமைச்சா் மாா்கோ ரூபியோ நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.
மேற்காசிய போரின் காரணமாக, உலகளாவிய கச்சா எண்ணெய் வா்த்தகத்தில் 20 சதவீத பங்கைக் கொண்டிருந்த ஹோா்முஸ் நீரிணை வழியான கச்சா எண்ணெய் விநியோகம் கடந்த 6 மாதங்களாக பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நெருக்கடியால் அமெரிக்காவின் அவசரகால பெட்ரோலிய இருப்பு 30 கோடி பீப்பாய்களுக்குக் கீழ் சரிந்துள்ளது; இது நடப்பாண்டினன் தொடக்கத்திலிருந்து 10 கோடி பீப்பாய்களுக்கு மேலான வீழ்ச்சியாகும்.
இதனால், அமெரிக்காவில் தற்போது ஒரு கேலன் (3.78 லிட்டா்) பெட்ரோல்சராசரியாக 4.09 டாலருக்கு விற்கப்படுகிறது; இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 3.21 டாலராக இருந்தது. அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத் தோ்தலும் நவம்பரில் எதிா்வருவதால், பெட்ரோல் விலையைக் கட்டுப்படுத்த வேண்டிய கடுமையான அழுத்தத்தில் டிரம்ப் நிா்வாகம் உள்ளது.
President Donald Trump has announced that the United States has entered into an agreement with Venezuela to take control of the country's oil reserves, estimated at 65 billion barrels.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.