ஹாங்காங்: தேசியப் பாதுகாப்பு வழக்கில் ஜிம்மி லாய்க்கு 20 ஆண்டுகள் சிறை!
ஜிம்மி லாய்க்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிப்பு.
தேசியப் பாதுகாப்பு சட்ட வழக்கில் ஹாங்காங்கின் ஜனநாயக ஆதரவு முன்னாள் பத்திரிகை அதிபர் ஜிம்மி லாய்க்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் காலனியாதிக்கத்தில் இருந்து வந்த ஹாங்காங், கடந்த 1997-ஆம் ஆண்டில் சீனாவிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. அப்போது, ‘ஒரே நாடு, இரண்டு ஆட்சி முறை’ என்ற கொள்கையின் கீழ் ஹாங்காங்கை ஆட்சி செய்ய சீனா ஒப்புக் கொண்டது.
அதன்படி, சீனாவில் வசிக்கும் மக்களுக்கு இல்லாத உரிமைகள் ஹாங்காங்வாசிகளுக்குக் கிடைக்கும் என்று கூறப்பட்டது.
Advertisement
Advertisement
எனினும், ஜனநாயக சீர்திருத்தங்களை வலியுறுத்தி அந்தப் பிராந்தியத்தில் நடைபெற்ற போராட்டத்தை அரசு இரும்புக் கரம் கொண்டு நசுக்கியது.
மேலும், சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீன நாடாளுமன்றம் கடந்த 2020-ஆம் ஆண்டு நிறைவேற்றியது. அந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி, ஏராளமான ஜனநாயக ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதன் ஒரு பகுதியாக, ஜனநாயகத்துக்கு ஆதரவான கருத்துகளை வெளியிட்டு வந்த ஹாங்காங்கின் ‘ஆப்பிள் டெய்லி’ நாளிதழ் நிறுவனரான ஜிம் லாய் மீது பிராந்திய அரசு பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி சிறையில் அடைத்தது. அரசின் நெருக்கடி காரணமாக அந்த நாளிதழ் நிறுத்தப்பட்டது.
ஜிம்மி லாய் வெளிநாட்டு சக்திகளுடன் சதி செய்து தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினார் என்றும் சீன அரசை வீழ்த்த அமெரிக்காவுக்கு தொடர்ந்து அழைப்பு விடுத்தார் என்றும் தெரிவிக்கப்பட்டு, அவர் கடந்தாண்டு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
2020 ஆகஸ்ட் முதல் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பெரும்பாலும் தனிமைச் சிறையில் அடைக்கப்படும் அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்த நிலையில், ஜிம்மி லாய்க்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
In a national security law case, Hong Kong's pro-democracy former media tycoon Jimmy Lai has been sentenced to 20 years in prison.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.