தந்தையின் இறுதிச்சடங்கில் மோஜ்தபா கமேனி பங்கேற்கமாட்டார்! ஈரானிய பிரதிநிதி தகவல்!
கொல்லப்பட்ட ஈரானிய தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கில் அவரது மகன் பங்கேற்கமாட்டார் எனத் தகவல்...
கொல்லப்பட்ட ஈரானிய தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கில், அவரது மகனும் தற்போதைய தலைமை மதகுருவுமான மோஜ்தபா கமேனி பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து கடந்த பிப்.28 அன்று நடத்திய கூட்டுத் தாக்குதலில், ஈரானிய தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து, இருதரப்புக்கும் இடையே வெடித்த போரானது தற்போது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதையடுத்து, கொல்லப்பட்ட தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனிக்கான இறுதிச்சடங்கு நிகழ்வுகள் வரும் சனிக்கிழமை (ஜூலை 4) தொடங்குகின்றன. மேலும், வரும் ஜூலை 9 அன்று அவரது உடல் ஈரானின் மஷாத் நகரத்தில் அடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ஈரானில் நடைபெறவுள்ள கமேனியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ஈரானிய தலைமை மதகுருவின் இந்தியாவுக்கான பிரதிநிதி அயதுல்லா ஹக்கீம் இலாஹி தில்லி விமான நிலையத்தில் இருந்து இன்று விமானம் மூலம் தெஹ்ரானுக்குப் புறப்பட்டார்.
அப்போது, கமேனியின் இறுதிச்சடங்கில் அவரது மகனும் தற்போதைய ஈரானின் தலைமை மதகுருவுமான அயதுல்லா மோஜ்தபா கமேனி பாதுகாப்பு காரணங்களால் பங்கேற்கமாட்டார் எனத் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:
“நான் கடந்த வாரம் ஈரானுக்குச் சென்றிருந்தபோது அவரை (மோஜ்தபா) சந்தித்த என் நண்பர்கள் சிலரைச் சந்தித்தேன். அவர் வெளியே வந்து மக்களைச் சந்திக்க விரும்புவதாகக் கூறினார்கள். ஆனால், அவர் வெளியே வருவதற்குப் பாதுகாப்புப் படையினர் அனுமதிக்கவில்லை.
மேலும், அது மிகவும் ஆபத்தானது அவருக்குத் தங்களால் போதுமான பாதுகாப்பு வழங்க முடியாது எனக் கூறியுள்ளனர். எனவே, இறுதிச்சடங்கில் அவர் பங்கேற்கமாட்டார் என நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
முன்னதாக, கமேனியின் இறுதிச்சடங்கில் லட்சக்கணக்கான ஈரானிய மக்கள் மற்றும் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வழக்கமாக ஈரானின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தலைமை மதகுருவின் தலைமையில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Mojtaba Khamenei will not participate in the funeral of slain Iranian Supreme Leader Ayatollah Ali Khamenei.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.