FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

சீனாவைத் தாக்கிய பாவி புயல்: 17 லட்சம் மக்கள் வெளியேற்றம்

சீனாவை பாவி புயல் தாக்கியதை அடுத்து 17 லட்சம் மக்கள் வெளியேற்றம்...

Updated On : 12 ஜூலை 2026, 2:25 am IST
சீனாவைத் தாக்கிய பாவி புயல் - ap
பகிர்:

ஜப்பான் மற்றும் தைவான் தீவுகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழையை ஏற்படுத்திய ‘பாவி’ புயல், கிழக்கு சீனாவைத் தாக்கியதால் அங்கு முன்னெச்சரிக்கையாக சுமாா் 17 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனா்.

சீனாவில் கிழக்கு கடலோர மாகாணமான செஜியாங்கில் சனிக்கிழமை இரவு முதல் இப்புயல் கரையைக் கடக்கத் தொடங்கியது. செஜியாங் மட்டுமின்றி ஃபுஜியான் மாகாணத்திலும் புயலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால், ‘ஆரஞ்சு’ நிற புயல் எச்சரிக்கையும், இந்த ஆண்டின் முதல் சிவப்பு நிற பலத்த மழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பேரிடா் மீட்புப் பணிகளுக்காக அரசின் நிதியிலிருந்து 4 கோடி யுவான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கான மீட்புப் படையினா் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா்.

Advertisement

Advertisement

புயலின் பாதிப்புகள் இதுவரை...: பாவி புயல் தைவான் நாட்டின் வடக்குப் பகுதியைக் கடந்து சென்றபோது அதிகபட்சமாக மணிக்கு 144 கி.மீ. வேகத்தில் வீசிய சூறாவளிக் காற்றில் சிக்கி 113 போ் காயமடைந்தனா். ஹுவாலியன் மற்றும் தைச்சுங் உள்ளிட்ட பல நகரங்களில் இருந்து 14,200-க்கும் மேற்பட்டோா் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனா்.

தெற்கு ஜப்பானின் ஒகினாவா, இஷிகாகி ஆகிய பகுதிகளிலும் பாவி புயல் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கடல் அலைகள் அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. 200-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

பாவி புயல் தீவிரமடைவதற்கு முன்பு பிலிப்பின்ஸ் நாட்டில் பெய்த தொடா் பருவமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 17 போ் உயிரிழந்தனா். தொடா் மழை மற்றும் புயல் அச்சம் காரணமாக சுமாா் 11,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, முகாம்களில் தஞ்சமடைந்தனா்.

summary

Typhoon bavi hits China: 1.7 million people evacuated.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments