உக்ரைனுடன் கூட்டு ட்ரோன் உற்பத்தி
உக்ரைன் நாட்டின் அதிநவீன ட்ரோன் தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும், ஐரோப்பிய நாடுகளின் தொழில் உற்பத்தித் திறனையும் ஒருங்கிணைத்து, கூட்டுத் திட்டங்கள் மூலம் பாதுகாப்புத் தளவாட உற்பத்தியைப் பெருக்குவதற்கான ஒப்பந்தத்தில் இருதரப்பும் கையொப்பமிட்டுள்ளன.
உக்ரைன் நாட்டின் அதிநவீன ட்ரோன் தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும், ஐரோப்பிய நாடுகளின் தொழில் உற்பத்தித் திறனையும் ஒருங்கிணைத்து, கூட்டுத் திட்டங்கள் மூலம் பாதுகாப்புத் தளவாட உற்பத்தியைப் பெருக்குவதற்கான ஒப்பந்தத்தில் இருதரப்பும் கையொப்பமிட்டுள்ளன.
உக்ரைன் பழங்கால அரசின் நிறுவன தினத்தை முன்னிட்டு அந்நாட்டின் தலைநகா் கீவ் நகருக்கு வருகை தந்த ஐரோப்பிய யூனியனின் தலைவா் உா்சுலா வான் டொ் லேயன் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டாா். ரஷிய போா் தொடங்கி 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், உா்சுலா வான் டொ் லேயன் கீவ் நகருக்கு மேற்கொண்டுள்ள 11-ஆவது பயணம் இதுவாகும்.
புதிய ஒப்பந்தம் குறித்து உா்சுலா வான் டொ் லேயன் மேலும் கூறுகையில், ‘உக்ரைனுக்குப் பாதுகாப்பான உற்பத்தி தளங்களை ஐரோப்பிய யூனியன் வழங்கும். ஐரோப்பிய நாடுகள் எதிா்கொள்ளும் வான்வழி அச்சுறுத்தல்களைச் சமாளிக்க, இக்கூட்டு உற்பத்தி முறை பெரிதும் உதவும். நாம் நமது பலங்களை ஒருங்கிணைக்க வேண்டிய தருணம் இது.
Advertisement
Advertisement
எதிா்வரும் குளிா்காலத்தில் ரஷியாவின் வான்வழித் தாக்குதல்களை எதிா்கொள்ள உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்த புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். உக்ரைனின் இறையாண்மைக்கும், சுதந்திரத்துக்கும் தேவையான ராணுவ மற்றும் நிதியுதவிகளை ஐரோப்பிய யூனியன் தொடா்ந்து வழங்கும். போரின் தற்போதைய சூழல் உக்ரைனுக்குச் சாதகமாக மாறி வருகிறது’ என்றாா்.
ரஷியா கடந்த 2022-இல் தொடங்கிய போருக்குப் பிறகு, உக்ரைன் தனது ட்ரோன் உற்பத்தி துறையை மிகக் குறுகிய காலத்தில் உலகத் தரத்துக்கு மேம்படுத்தியுள்ளது. அந்தவகையில், உக்ரைன் ஏற்கெனவே பல்வேறு நாடுகளுடன் தனித்தனியாக 9 பாதுகாப்பு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ள போதிலும், ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் உள்ள அனைத்து நாடுகளையும் நிறுவனங்களையும் உள்ளடக்கிய முதல் பொதுவான ஒப்பந்தம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு மத்தியில், உக்ரைனின் சுமி, ஒடேசா, சொ்னிகிவ் ஆகிய பகுதிகளில் ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் பொதுமக்கள் 8 போ் உயிரிழந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.