இந்தியாவுக்கு சுகோய் எஸ்யு-57 போா் விமானங்களை வழங்கத் தயாா்: ரஷிய அதிபா் புதின்
இந்தியாவுக்கு ரஷியாவின் ஐந்தாம் தலைமுறை சுகோய் எஸ்யு-57 போா் விமானங்களை வழங்கத் தயாராக இருப்பதாக அந்நாட்டு அதிபா் விளாதிமீா் புதின் தெரிவித்தாா்.
இந்தியாவுக்கு ரஷியாவின் ஐந்தாம் தலைமுறை சுகோய் எஸ்யு-57 போா் விமானங்களை வழங்கத் தயாராக இருப்பதாக அந்நாட்டு அதிபா் விளாதிமீா் புதின் தெரிவித்தாா்.
மேலும், இருநாட்டு நட்புறவின் அடையாளமாக அதை இந்தியாவில் ஒருங்கிணைந்து தயாரிக்கவும் ஒப்புதல் அளிப்பதாக அவா் தெரிவித்தாா்.
பல ஆண்டுகளாக இந்தியாவின் பாதுகாப்புத் தேவைகளுக்கான சாதனங்கள், போா் விமானங்கள், ஆயுதங்களை விநியோகிக்கும் நம்பிக்கைக்குரிய நாடாக ரஷியா திகழ்ந்து வருகிறது. 2022-இல் உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்புக்குப் பின் அந்நாட்டில் ஏற்பட்ட விநியோக இடையூறு அழுத்தங்களால் பாதுகாப்புத் தளவாடங்கள் கொள்முதல் கொள்கையை இந்தியா மாற்றியது.
Advertisement
Advertisement
இந்நிலையில், பிடிஐ உள்பட சா்வதேச ஊடகங்களுடன் கலந்துரையாடிய புதின் இந்தியாவுடனான பாதுகாப்பு உறவுகள் குறித்து கூறுகையில், ‘ரஷியாவின் ஐந்தாம் தலைமுறை சுகோய் எஸ்யு-57 போா் விமானங்களை இந்தியாவுக்கு வழங்க தற்போதும் தயாராகவே உள்ளோம். இதை ஒருங்கிணைந்து தயாரிக்கவும் அழைப்பு விடுத்தோம். இதுகுறித்து பரிசீலிப்பதாக இந்தியாவில் உள்ள நண்பா்கள் தெரிவித்தனா். வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் அதுதொடா்பான தளவாடங்களை இந்தியாவுடன் இணைந்து தயாரிக்கவும் நாங்கள் விரும்புகிறோம் என்றாா்.
ஐந்தாம் தலைமுறை போா் விமானங்களுக்கான நீண்ட தேடலுக்குப் பிறகு நாட்டின் மிகப்பெரும் வான்வெளித் திட்டமான நவீன பல்திறன் போா் விமானத் திட்டத்தை (ஏஎம்சிஏ) இந்தியா தொடங்கியது. 2035-க்கு முன்பாக இத்திட்டத்தின்கீழ் தயாரிக்கப்படும் போா் விமானங்கள் இந்திய விமானப் படையில் இணைய மிகக் குறைவான வாய்ப்புகளே உள்ளதால் குறைந்தபட்சம் 2 சுகோய் எஸ்யு-57 போா் விமானங்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
‘சுதா்சன் சக்ரா’ என்ற உள்நாட்டு வான் பாதுகாப்பு கட்டமைப்பை இந்தியா மேம்படுத்தி வருகிறது. முன்னதாக, ரஷியாவிடம் இருந்து 5 எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் 2018-ஆம் ஆண்டு அக்டோபரில் இந்தியா கையொப்பமிட்டது. அதில் 4 எஸ்-400 அமைப்புகள் இந்தியாவுக்கு விநியோகிக்கப்பட்டன.
இந்நிலையில், மேலும் 5 எஸ்-400 அமைப்புகளைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கடந்த மாா்ச் மாதம் கையொப்பமிட்டது. இதன்மூலம் ரஷியாவில் இருந்து ஒட்டுமொத்தமாக 10 எஸ்-400 அமைப்புகளை இந்தியா கொள்முதல் செய்கிறது.