வளைகுடா நாடுகளைக் குறிவைத்து ஈரான் தாக்குதல்: வலுக்கும் கண்டனம்!
குவைத், பஹ்ரைன் நாடுகளின் இறையாண்மையை மீறி ஈரான் தாக்குதல்... கத்தார், எகிப்து கண்டனம்
குவைத், பஹ்ரைனைக் குறிவைத்து ஈரான் படைகள் நடத்திய தாக்குதல்களுக்கு கத்தார், எகிப்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஈரானின் கெஷ்ம் தீவிலுள்ள முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து அமெரிக்க படைகள் ட்ரோன் மூலம் சனிக்கிழமை (ஜூன் 6) அதிகாலை 2.30 மணிக்குத் தாக்குல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, பஹ்ரைன் நாட்டிலுள்ள அலி அல் சலீம் விமானப் படைத் தளம் மற்றும் குவைத்திலுள்ள ஐந்தாம் கடற்படைத் தலைமையகம் ஆகிய அமெரிக்க தளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக, ஈரானிய ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement
குவைத் வான்வெளியில் அதிகாலையில் ஏவப்பட்ட ஈரானிய ஏவுகணைகள் 7-ஐ குவைத்தின் பாதுகாப்புப் படைகள் கண்டறிந்து தக்க பதிலடி அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் பறந்த அந்த ஏவுகணைகளை வழிமறித்து தாக்கியதில் உடைந்த ஏவுகணை பாகங்கள் கீழே விழுந்து சேதத்தை ஏற்படுத்தியதாக குவைத் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் சிலருக்கு காயம் ஏற்பட்டதாகவும் ஆனால், உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குவைத், பஹ்ரைனைக் குறிவைத்து ஈரான் படைகள் நடத்திய தாக்குதல்களுக்கு கத்தார், எகிப்து கண்டனம் தெரிவித்துள்ளன. ஒட்டுமொத்த வளைகுடா பகுதியின் பாதுகாப்பையும் அச்சுறுத்தும் அபாயகரமான நடவடிக்கையாகும் என்று எகிப்து கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, கத்தார் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் குவைத், பஹ்ரைன் மீதான ஈரானின் தொடர் தாக்குதல்கள் அவ்விரு வளைகுடா நாடுகளின் இறையாண்மையை மீறும் செயல் மட்டுமல்ல சர்வதேச சட்ட மீறலாகும். நியாயமற்ற தாக்குதல்களுக்கு ஈரான் பின்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும்.
குவைத், பஹ்ரைனுடன் கத்தார் முழு ஆதரவுடன் துணை நிற்பதாகவும், தங்களுடைய இறையாண்மையையும் பாதுகாப்பையும் காக்க அவ்விரு நாடுகளும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கும் தங்கள் ஆதரவு உண்டு என்றும் தெரிவித்துள்ள கத்தார் போர்நிறுத்தம் ஏற்படவும் வலியுறுத்தியுள்ளது.
முன்னதாக, கடந்த ஜூன் 3-ஆம் தேதி, குவைத் சிட்டி சா்வதேச விமான நிலையம் மீது பல ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதில் இந்தியா் ஒருவா் உயிரிழந்தாா். பொதுமக்கள், பயணிகள், விமான நிலைய ஊழியா்கள் 63 பேர் காயமடைந்தனர். இத்தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், அந்நாட்டின் மீதான ஈரானின் தாக்குதல் தொடருவதால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.