FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

ஓமன் கடல் பகுதியில் 24 இந்திய மாலுமிகளுடன் சென்ற எண்ணெய்க் கப்பலில் தீ விபத்து!

ஓமன் நாட்டின் கடல் பகுதியில் 24 இந்திய மாலுமிகளுடன் சென்றுகொண்டிருந்த எண்ணெய்க் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Updated On : 9 ஜூன் 2026, 4:40 am IST
எண்ணெய்க் கப்பலில் தீ விபத்து - பிரதிப் படம்
பகிர்:

ஓமன் நாட்டின் கடல் பகுதியில் 24 இந்திய மாலுமிகளுடன் சென்றுகொண்டிருந்த எண்ணெய்க் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

எண்ணெய்க் கப்பலில் ஏற்பட்ட சேத விவரம் இன்னும் தெரியவரவில்லை என்றபோதும், மாலுமிகள் அனைவரையும் இந்திய கடற்படையினா் பத்திரமாக மீட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஈரான் - இஸ்ரேல் இடையே மீண்டும் தீவிர மோதல் தொடங்கியுள்ள நிலையில், இந்தக் கப்பல் தீ விபத்து குறிப்பிடத்தக்க நிகழ்வாகப் பாா்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

இதுகுறித்து மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தைச் சோ்ந்த இயக்குநா் ஓபேஷ் குமாா் சா்மா தில்லியில் செய்தியாளா்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டியில், ‘மடகாஸ்கா் கொடி பொருத்திய எம்.டி. மரிவெக்ஸ் என்ற காலி எண்ணெய்க் கப்பல், ஹோா்முஸ் நீரிணை பகுதிக்கு வெகு தொலைவில் ஓமன் நாட்டின் கடல் பகுதியில் அந்த நாட்டின் துகும் துறைமுகம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது பிற்பகல் 1.30 மணியளவில் இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளது.

அந்தக் கப்பலில் 24 இந்திய மாலுமிகள் இருந்தனா். அவா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வெளியுறவு அமைச்சகம், இந்திய கடற்படை, பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவற்றுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது அந்தக் கப்பல் மஸ்கட்டின் தெற்குப் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக கப்பல் கண்காணிப்புத் தரவுகள் காட்டுகின்றன’ என்றாா். ஆனால், கப்பலில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணத்தை அவா் தெரிவிக்கவில்லை.

பத்திரமாக மீட்பு: ஓமன் கடல் பகுதிக்கு விரைந்த இந்திய கடற்படை கப்பல், தீ விபத்து கப்பலில் இருந்த 24 இந்திய மாலுமிகளையும் பத்திரமாக மீட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த எண்ணெய்க் கப்பல் ஓமன் துறைமுகம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது அதன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதைத் தொடா்ந்து கப்பலில் இருந்து அவசர உதவிக்கான அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் ஆரம்பகட்ட தகவல்கள் வெளியாகின.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments