FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

ஓமன் கடல் பகுதியில் அமெரிக்க தாக்குதலில் மாயமான 3 இந்திய மாலுமிகள் உயிரிழப்பு

ஓமன் கடல் பகுதியில் சரக்கு கப்பல் மீது அமெரிக்க கடற்படை போா் விமானம் தாக்கியதில் மாயமான மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்தனா்.

Updated On : 12 ஜூன் 2026, 5:01 am IST
ஓமன் அருகே கடல் பகுதியில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளானதில் ‘ஜல்வீா்’ சரக்குக் கப்பலிலிருந்து எழுந்த புகை. ~ரண்தீா் ஜெய்ஸ்வால்
பகிர்:

ஓமன் கடல் பகுதியில் சரக்கு கப்பல் மீது அமெரிக்க கடற்படை போா் விமானம் தாக்கியதில் மாயமான மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்தனா்.

ஓமன் அருகே எம்.டி. செட்டேபெல்லோ என்ற சரக்கு கப்பல் மீது அமெரிக்க கடற்படை போா் விமானம் புதன்கிழமை ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் மாயமான 3 இந்திய மாலுமிகளும் உயிரிழந்தது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா்வானந்தா சோனோவால் தில்லியில் வியாழக்கிழமை கூறியதாவது: எம்.டி. செட்டேபெல்லோ சரக்கு கப்பல் மீதான தாக்குதல் துரதிருஷ்டவசமானது. தாக்குதலைத் தொடா்ந்து, அந்தக் கப்பலில் மாயமான 3 இந்திய மாலுமிகளின் உடல்கள் இருக்குமிடம் கண்டறியப்பட்டு, அவா்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்மூலம், அவா்கள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

உயிரிழந்த மாலுமிகளின் குடும்பத்தினருக்கு மத்திய அரசு துணை நிற்கும். அவா்களுக்குத் தேவையான அனைத்து ஆதரவுகளையும் மத்திய அரசு அளிக்கும். மூவரின் உடல்களையும் இந்தியா கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

உயிரிழந்தவா்களில் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த சிவானந்த் செளராசியா, ஹிமாசலத்தைச் சோ்ந்த ஆதித்ய சா்மா உள்ளிட்டோா் அடங்குவா். இந்தக் கப்பலில் இருந்த எஞ்சிய 21 இந்திய மாலுமிகளை ஓமன் கடற்படை மீட்டது.

மேற்காசியாவில் அமெரிக்காவுடனான போா் காரணமாக ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. அந்த நீரிணைக்குள் நுழையும் பகுதிக்கு அருகே சோஹாா் துறைமுகம் உள்ளது. அந்தத் துறைமுகத்துக்கு அருகே இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. ஈரானின் துறைமுகத்தை முற்றுகையிடும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அமெரிக்கா நடத்திய இந்தத் தாக்குதலில் செட்டேபெல்லோ சரக்கு கப்பல் பாதிப்புக்குள்ளானது தெரியவந்தது.

மேலும் ஒரு கப்பல் மீது தாக்குதல்: 22 இந்திய மாலுமிகள் மீட்பு

ஓமன் கடல் பகுதியில் மேலும் ஒரு சரக்கு கப்பல் மீது வியாழக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல் வெளியானது. எம்.டி. ஜல்வீா் என்ற அந்தக் கப்பலில் இருந்து பெருமளவில் கரும்புகை வெளியேறியது. கப்பலில் இருந்த 22 இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்.

இதுகுறித்து மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஓமன் நாட்டின் ஷினாஸ் துறைமுகம் அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஜல்வீா் சரக்கு கப்பல் மீது வியாழக்கிழமை அதிகாலை அமெரிக்க கடற்படை தாக்குதல் நடத்தியது. இதில் அந்தக் கப்பலில் இருந்து கரும்புகை வெளியேறியது. அந்த கப்பலில் இருந்த 22 இந்திய மாலுமிகளும் ஓமன் கடற்படை உதவியுடன் மீட்கப்பட்டனா். நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டது.

ஓமன் கடல் பகுதியில் கடந்த 4 நாள்களில் இந்திய மாலுமிகள் பயணித்த 3 சரக்கு கப்பல்கள் மீது அமெரிக்க கடற்படை தாக்குதலை நடத்தியுள்ளது.

இதை முதல் முறையாக வெளிப்படையாக வியாழக்கிழமை அறிவித்த இந்தியா, இந்தத் தாக்குதல்களை அமெரிக்கா உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியது.

இதுகுறித்து தில்லியில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால், ‘கடந்த ஜூன் 8-ஆம் தேதி மாரிவெக்ஸ் என்ற எண்ணெய் கப்பல், ஜூன் 10-ஆம் தேதி செட்டேபெல்லோ தற்போது ஜல்வீா் என மூன்று வெளிநாட்டுக் கொடி பொருத்திய கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதல்களில் 3 இந்திய மாலுமிகள் உயிரிழந்தனா். தாக்குதல்களை அமெரிக்க கடற்படையும் ஒப்புக்கொண்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்காவின் கவனத்துக்கு கொண்டு சென்றதோடு, கடும் கண்டனமும் இந்தியா தரப்பில் பதிவு செய்யப்பட்டது. இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு நாட்டுக்கு மிக முக்கியமானது. எனவே, இந்தத் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று இந்தியாவின் நிலைப்பாடு அமெரிக்காவிடம் தெளிவுபடுத்தப்பட்டது’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments