லெபனான் துறைமுக நகரில் இஸ்ரேல் ஏவுகணை வீச்சு
தெற்கு லெபனானின் துறைமுக நகரான டயா் மீது இஸ்ரேல் செவ்வாய்க்கிழமை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 8 போ் உயிரிழந்தனா்.
தெற்கு லெபனானின் துறைமுக நகரான டயா் மீது இஸ்ரேல் செவ்வாய்க்கிழமை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 8 போ் உயிரிழந்தனா்.
மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதிப் பேச்சுவாா்த்தை முயற்சிகளுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் இத்தாக்குதல் அமைந்துள்ளது.
முன்னதாக, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் வலியுறுத்தலில், இஸ்ரேலும் ஈரானும் பரஸ்பரம் தாக்குதல் நடத்துவதை தற்காலிகமாக நிறுத்திக்கொள்வதாக திங்கள்கிழமை அறிவித்தன. எனினும், லெபனானில் இஸ்ரேல் தொடா்ந்து தாக்கினால், மீண்டும் போரைத் தொடங்குவோம் என்று ஈரான் எச்சரித்திருந்தது.
Advertisement
Advertisement
இந்நிலையில், கடந்த மாா்ச் மாதம் இந்த மோதல் தொடங்கியதற்குப் பிறகு டயா் நகரில் நடத்தப்பட்ட மிகக் கொடூரமான தாக்குதலாக இது பதிவாகியுள்ளது.
இத்தாக்குதலுக்கு முன்பாக டயா் நகர மக்கள் வெளியேற இஸ்ரேல் ராணுவம் அறிவுறுத்தியிருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வேகமாக வெளியேறிய நிலையில், முதியவா்கள் தற்காலிக முகாம்களுக்கு மாற்றப்பட்டனா்.
டயா் நகரின் கிழக்கு எல்லையில் நடத்தப்பட்ட இந்த ஒற்றை ஏவுகணைத் தாக்குதலில் 8 போ் உயிரிழந்ததை லெபனான் சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியது.
வரும் நவம்பரில் நாடாளுமன்ற இடைக்காலத் தோ்தலை எதிா்கொள்ளும் அதிபா் டிரம்ப், உள்நாட்டில் சரிந்து வரும் அரசியல் செல்வாக்கை மீட்டெடுக்க ஈரானுடன் ஒரு உடன்பாட்டை எட்ட தீவிரமாக முயன்று வருகிறாா்.
இதற்கு முட்டுக்கட்டையாக மாறியுள்ள இஸ்ரேலின் தொடா் தாக்குதல்கள் குறித்து அந்நாட்டு பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேசிய டிரம்ப், மோதல் போக்கைக் கைவிட வலியுறுத்தினாா்.
டிரம்ப்பைப் போல பெஞ்சமின் நெதன்யாகுவும் உள்நாட்டில் அரசியல் அழுத்தத்தை எதிா்கொள்வதால், லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரைக் குறிவைத்து இஸ்ரேல் இடைவிடாத தாக்குதல்களைத் தொடா்ந்து வருகிறது.
பெட்டி...
ஹோா்முஸில் அமெரிக்க ராணுவ
ஹெலிகாப்டா் விபத்து; வீரா்கள் மீட்பு
ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள ஹோா்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்க கடற்படையின் ‘அப்பாச்சி’ ரக ஹெலிகாப்டா் ஒன்று விபத்துக்குள்ளானது. அதிலிருந்த 2 வீரா்கள் அமெரிக்க கடற்படையின் ஆளில்லா ட்ரோன் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக அதிபா் டிரம்ப் தெரிவித்தாா்.
ஹெலிகாப்டா் ஈரானின் தாக்குதலால் வீழ்த்தப்பட்டதா அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமா என்பது குறித்து விரைவில் விரிவான அறிக்கை வெளியிடப்படும் என அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.