போப் லியோவை கண்ணீர் விட்டு அழுது வழியனுப்பிய ஆர்ஜென்டீன அதிபர்!
போப் 14-ம் லியோவை ஆர்ஜென்டீன அதிபர் மிலெய் கண்ணீர் விட்டு அழுதபடி வழியனுப்பியது குறித்து...
போப் பதினான்காம் லியோவை ஆர்ஜென்டீன அதிபர் ஜாவியர் மிலேய் கண்ணீர் விட்டு அழுதபடி வழியனுப்பிய விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமை மதகுருவும், வாடிகன் நகரத்தின் தலைவருமான போப் பதினான்காம் லியோ தென் அமெரிக்க நாடுகளுக்கு 12 நாள்கள் அரசு முறையாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
Advertisement
Advertisement
அந்நாடுகளில் அவரைச் சந்திக்க லட்சக்கணக்கான மக்கள் திரண்டதுடன் அவரது தலைமையில் நடைபெறும் மத வழிபாட்டு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகின்றனர்.
கடந்த நவ.6 தேதி உருகுவே நாட்டில் 3 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போப் லியோ அங்கிருந்து கடந்த நவ.8 ஆம் தேதி ஆர்ஜென்டீனா நாட்டுக்குச் சென்றடைந்தார்.
இதையடுத்து, ஆர்ஜென்டீனாவின் தீவிர வலதுசாரி அதிபர் மிலேய் உடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்திய போப் லியோ, தலைநகர் புவெனஸ் அயர்ஸில் சிறப்பு வழிபாடுகளை நடத்தினார்.
இந்த நிலையில், தனது ஆர்ஜெண்டீனா பயணத்தை நிறைவுச் செய்த போப் லியோ நேற்று (நவ. 11) அங்கிருந்து பெரு நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார். அப்போது, விமான நிலையத்துக்கு நேரில் வந்திருந்த அதிபர் மிலேய் கண்ணீருடன் அழுதபடி போப் லியோவுடன் கைகுலுக்கி அவரை வழியனுப்பி வைத்தார்.
முன்னதாக, மறைந்த முன்னாள் போப் இரண்டாம் ஜான் பால் கடந்த 1987 ஆம் ஆண்டு ஆர்ஜெண்டீனா நாட்டுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அதன்பிறகு, போப் ஒருவர் அந்நாட்டுக்குச் சென்றது இதுவே முதல்முறை என்பதால் போப் லியோ தலைமையில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளை முன்னிட்டு தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த வழிபாடு நிகழ்ச்சியில் சுமார் 25 லட்சம் மக்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.