தலிபான்களுடன் வர்த்தகப் பேச்சு! ஆப்கன் சென்றார் ரஷியாவின் துணைப் பிரதமர்!
ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு மற்றும் ரஷியா இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் குறித்து...
ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுடன் ரஷியா வர்த்தகப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தலைமையிலான அரசு அமைந்து 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. உலகின் முதல் நாடாக தலிபான் அரசைக் கடந்த 2025 ஆம் ஆண்டு ரஷியா அங்கீகரித்தது.
Advertisement
Advertisement
நீண்டகாலமாகப் போர்கள் மற்றும் கிளர்ச்சிகளால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில் அடிப்படை வசதிகளை வழங்கும் கட்டமைப்புகள் பலத்த சேதமடைந்துள்ளன. மேலும், சர்வதேச நாடுகளால் புறக்கணிக்கப்படும் தலிபான் அரசு கடுமையான பொருளாதார நெருக்கடியிலும் சிக்கியுள்ளது.
இதையடுத்து, வெளிநாட்டு முதலீடுகளை தலிபான்கள் கோரி வரும் நிலையில், ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுடன் வர்த்தகம் மற்றும் முதலீடு குறித்த பேச்சுவார்த்தைகளை ரஷிய அரசு தொடங்கியுள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள ரஷிய துணைப் பிரதமர் அலக்ஸெய் ஓவர்சுக் தலைமையிலான பிரதிநிதிகள் இன்று (நவ. 12) காபுல் நகரத்துக்குச் சென்றடைந்துள்ளனர்.
காபுல் விமான நிலையத்தில் ரஷிய பிரதிநிதிகளுக்கு ஆப்கன் அரசின் சார்பில் ராணுவ வரவேற்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், ஆப்கன் பிரதமர் முகமது ஹசன் அகுந்த் மற்றும் துணைப் பிரதமர் அப்துல் கனி பரதர் ஆகியோரை அலக்ஸெய் நேரில் சந்தித்து உரையாடினார்.
இத்துடன், ஆப்கானிஸ்தானில் பெருமளவில் வளங்களும், சுமார் 2.4 கோடி உழைக்கும் மக்கள் இருப்பதாலும், சர்வதேச நாடுகள் அங்கு இயற்கை வளம், தொழிற்சாலைகள், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடு செய்ய தலிபான் அரசு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.