பிரிட்டனின் விலையுயர்ந்த விவாகரத்து! ரூ. 7,382 கோடி ஜீவனாம்சம் கேட்கும் தொழிலதிபரின் மனைவி!
பிரிட்டனின் அதிக மதிப்பு மிக்க விவாகரத்து குறித்து...
ரஷியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான விளாதிமீர் பொடானின் உடைய மனைவி நடாலியா பொடானினா, விவாகரத்துக்காக ரூ. 7,382 கோடி ஜீவனாம்சம் கோரியுள்ளார்.
மனைவியின் இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டால், பிரிட்டனின் மிக மதிப்பு மிக்க விவாகரத்தாக இது அமையும் எனக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
பிரிட்டனில் உள்ள தொழிலதிபர்களில் முக்கியமானவர் விளாதிமீர் பொடானின். ரஷியாவைச் சேர்ந்த இவர், சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு பிரிட்டனில் குடியேறியுள்ளார்.
சுரங்கம் உள்ளிட்ட தொழில்களில் மிகப்பெரிய வருவாய் ஈட்டிவரும் விளாதிமீர் பொடானின், பல்லேடியம் மற்றும் நிக்கல் உற்பத்தியில் உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாப 'நோரில்ஸ்க் நிக்கல்' (Norilsk Nickel) நிறுவனத்தில் கணிசமான பங்குகளுக்கு சொந்தக்காரராக உள்ளார்.
ஃபோர்ப்ஸ் இதழின் தகவல்படி, 2018-ஆம் ஆண்டிலிருந்து அவரது சொத்து மதிப்பு ஏறக்குறைய இருமடங்காக அதிகரித்துள்ளது.
விளாதிமீர் பொடானினுக்கும் நடாலியா பொடானினாவுக்கும் 1983 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவரும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து வாழ்ந்து வந்தனர். பிறகு 2014 ஆம் ஆண்டு ரஷியாவில் விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.
ரஷியாவில் கொடுக்கப்பட்ட விவாகரத்துக்காக 30.9 மில்லியன் பவுண்ட்ஸ் (ரூ. 380 கோடி) ஜீவனாம்சமாக கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதனை அவரின் மனைவி தொடர்ந்து மறுத்து வருகிறார்.
வெளிநாட்டில் விவாகரத்து பெற்ற தனிநபர்கள், பிரிட்டனோடு போதுமான தொடர்புகளை ஏற்படுத்தி, வெளிநாட்டு விவாகரத்து ஏற்பாடு போதுமானதாக இல்லை என்பதையும் நிரூபிக்க முடிந்தால், இங்கிலாந்தில் கூடுதல் நிதி நிவாரணம் கோரலாம் என்ற விதி உள்ளது.
இந்த விதியின்படி நடாலியா மீண்டும் ஜீவனாம்சம் கோரி பிரிட்டன் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 2019 ஆம் ஆண்டு தொடரப்பட்ட இவரின் மனு ஆரம்பத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது. பின்னர், பிரிட்டனுடன் முறையான தொடர்பு இருப்பதால், அவரின் மனுவை பரிசீலனை செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் பிறகே இந்த வழக்கு பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
2018 ஆம் ஆண்டுக்கு பிறகு பொடானின் உடைய சொத்து மதிப்பு இரு மடங்கு அதிகரித்துள்ளதாகவும், இதில் தனக்கும் பங்கு உள்ளது என்றும் தன் தரப்பில் வாதங்களை நடாலியா முன்வைத்துள்ளார். அவரின் மூன்று குழந்தைகளையும் வீட்டையும் கவனித்துக்கொண்டதால்தான் தொழில்துறையில் பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்க முடிந்ததாகவும் வாதிட்டுள்ளார்.
தனது எஞ்சிய வாழ்வுக்காகவும் அதன் செலவுகளுக்காகவும் பொடானின் சொத்தில் இருந்து ரூ. 7,382 கோடி பங்கு வேண்டும் என நடாலியா கோரியுள்ளார்.
அவ்வாறு இல்லை என்றால், லண்டனில் உள்ள பங்களாவையும் அதன் பராமரிப்புக்காக 10 மில்லியன் பவுண்ட்ஸையும் வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளார். இதன்மூலம் இந்த விவகாரம் லண்டனின் மதிப்பு மிக்க விவாகரத்தாக மாறியுள்ளது.