35 ஆண்டுகளில் முதல்முறை..! அமெரிக்காவில் 5,800-ஐ கடந்த தட்டம்மை பாதிப்புகள்!
அமெரிக்காவில் 5,800-க்கும் அதிகமானோர் தட்டம்மையால் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து...

அமெரிக்காவில், 35 ஆண்டுகளில் முதல்முறையாக 5,800-க்கும் அதிகமானோர் தட்டம்மை பரவலால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடந்த சில வாரங்களாக, தட்டம்மை பரவல் அதிகரித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை (நவ. 19) நிலவரப்படி 2026 ஆம் ஆண்டில் மட்டும் 5,838 பேர் தட்டம்மையால் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவின் 47 அதிகார வரம்புகளில் 5,820 தட்டம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளதாகவும், இந்தப் பரவலால் 18 வெளிநாட்டவரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்நாட்டின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement
இதில், பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 646 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
மேலும், 1991 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக அதிக பாதிப்புகள் உறுதியாகியுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரில் 96 சதவிகிதம் பேர் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
இத்துடன், தட்டம்மையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமான பென்சில்வேனியாவில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 1,631 பாதிப்புகளும், 8 மரணங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக, அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் பொலிவியா ஆகிய நாடுகளில் தட்டம்மை பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அந்நாடுகள் தட்டம்மை ஒழிக்கப்பட்ட நாடுகள் எனும் தகுதியை இழந்துவிட்டதாக, பான் அமெரிக்க சுகாதார அமைப்பு (பிஏஹெச்ஓ) அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.