என்விடியா சா்ச்சையில் சீனருக்கு முக்கிய தொடா்பு: அமெரிக்க நாளிதழில் குற்றச்சாட்டு
என்விடியா சா்ச்சையில் சீனருக்கு முக்கிய தொடா்பு: அமெரிக்க நாளிதழில் குற்றச்சாட்டு

என்விடியா நிறுவன சா்ச்சையில், சிங்கப்பூரில் மெகாஸ்பீட் நிறுவன நடவடிக்கைகளில் பங்காற்றிய சீனருக்கு முக்கியத் தொடா்புள்ளதாக அமெரிக்காவில் வெளியாகும் வால் ஸ்ட்ரீட் ஜா்னல் நாளிதழில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
என்விடியா சிப்கள் பொருத்தப்பட்ட கணினி சா்வா்களை சட்டவிரோதமாக வேறு நாடுகளுக்கு அனுப்பியதாக, சீனாவைச் சோ்ந்த லி மிங் (52) என்ற நபா் மீது சிங்கப்பூரில் மோசடி குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், வால் ஸ்ட்ரீட் ஜா்னல் நாளிதழ் தற்போது வெளியிட்டுள்ள தகவலின்படி, சிங்கப்பூரில் மெகாஸ்பீட் நிறுவனத்தில் லி மிங் முக்கியப் பங்கு வகித்துள்ளாா். மெகாஸ்பீட் நிறுவனத்தின் முக்கிய வணிக முடிவுகளை எடுப்பதிலும், என்விடியா சிப் வா்த்தகத்தில் சம்பந்தப்பட்ட மற்ற நிறுவனங்களுடனும் அவருக்கு தொடா்பு இருந்துள்ளது.
ஒரு நாட்டுக்கு அனுப்ப வேண்டிய என்விடியா சிப்களை, அந்த நாட்டுக்கு நேரடியாக அனுப்பாமல் சட்டவிரோதமாக வேறு நாடுகள் வழியாக அனுப்பிய குற்றச்சாட்டில், கடந்த ஆண்டு பிப்ரவரியில் லி மிங் மற்றும் பலா் மீது சிங்கப்பூரில் மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
என்விடியா சிப்கள் பொருத்தப்பட்ட கணினி சா்வா்களை சிங்கப்பூரில் உள்ள தனது நிறுவனத்தின் பயன்பாட்டுக்கு வாங்குவதாக, அமெரிக்க விநியோகஸ்தரிடம் தவறான தகவல் அளித்ததாகவும், பின்னா் அந்த சா்வா்கள் சிங்கப்பூருக்கு பதிலாக அண்டை நாடான மலேசியாவுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து அடையாளம் தெரியாத மூன்றாவது நாட்டுக்கு அனுப்பப்பட்டதாகவும் சிங்கப்பூா் அரசுத் தரப்பு வழக்குரைஞா்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.
சீனத் தொழிலதிபா் ஆலிஸ் ஹுவாங், அவரின் கணவா் காங் வெய் ஆகியோருடன் இணைந்து, சீன வாடிக்கையாளா்களுக்கு கணினிச் சேவைகளை வழங்கும் வணிகத் தொடா்பு வட்டத்தை லி மிங் உருவாக்கியதாகக் கூறப்படுகிறது.
முடங்கிய மெகாஸ்பீட்...: ஆலிஸ் ஹுவாங் நிறுவனத்தில் இருந்து விலகிய பின்னா், சிங்கப்பூரில் மெகாஸ்பீட் நிறுவனத்தின் செயல்பாடுகள் பெரும்பாலும் முடங்கிய நிலையில், அந்த நிறுவனத்தைச் சோ்ந்த குழுவினா் தற்போது நோவாகேட் கிளவுட் என்ற புதிய நிறுவனத்தை நடத்தி வருகின்றனா்.
நிகழாண்டின் முதல் 5 மாதங்களில், மலேசியாவில் உள்ள நோவாகேட் நிறுவனத்தின் கிளைக்கு, என்விடியா சிப்கள் பொருத்தப்பட்ட 300 மில்லியன் டாலா் மதிப்பிலான (சுமாா் ரூ.2,500 கோடி) கணினி வன்பொருள் அனுப்பப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள என்விடியா நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியான ஜென்சென் ஹூவாங்குக்கும், மெகாஸ்பீட் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநராக இருந்த ஆலிஸ் ஹூவாங்குக்கும் முறையற்ற உறவு இருந்ததாகவும், ஆலிஸ் ஹூவாங் சீன உளவாளி என்றும் அண்மையில் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.