முகப்பு

நுண்ணறிவும், பட்டறிவும்...

அமெரிக்காவில், சீனப் பெண்ணின் காதல் வலையில் சிக்கிய என்விடியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங் இப்போது உலக அளவில் பேசுபொருளாகி இருக்கிறார்.

6 வினாடிகள் முன்பு
நுண்ணறிவும், பட்டறிவும்...
ஜென்சன் ஹுவாங் - படம் - ஏபி
பகிர்:

அமெரிக்காவில், சீனப் பெண்ணின் காதல் வலையில் சிக்கிய என்விடியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங் இப்போது உலக அளவில் பேசுபொருளாகி இருக்கிறார். அவர் தனது காதல் தொடர்பை ஒப்புக்கொண்டு, பதவியில் இருந்து விலகிவிட்டார் என்றாலும்கூட, அவர் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெறும்.

ஒரு பெருநிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருப்பவர் திருமணம் கடந்த உறவில் இருப்பது அவரது தனிப்பட்ட வாழ்க்கை, விருப்பம். ஆனால், இந்த விவகாரத்தில் அவர் அமெரிக்காவின் தேசப் பாதுகாப்பில் சமரசம் செய்து கொண்டார் என்பதுதான் அவர்மீதான குற்றச்சாட்டு. அதனால், இதை சாதாரணமாகக் கடந்து செல்ல முடியாது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படையான மென்பொருள் மற்றும் வன்பொருள் உற்பத்தியில் 80-90 சதவீத சந்தையை என்விடியா நிறுவனம் தன்வசம் வைத்துள்ளது. இந்த நிறுவனத்தின் பிளாக்வெல் வரிசைத் தொழில்நுட்பம் அமெரிக்க ராணுவப் பாதுகாப்பில் இடம் பெறுகிறது. ஆகவே, இந்தத் தொழில்நுட்பம் சார்ந்த சிப்-களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யக்கூடாது என அமெரிக்கா தடை விதித்துள்ளது.

Advertisement

Advertisement

இந்தத் தடையை மீறி, சிங்கப்பூரில் உள்ள மெகாஸ்பீட் என்ற நிறுவனத்தின் மூலமாக சீனாவுக்கு இத்தொழில்நுட்பம் கிடைக்க ஜென்சன் உதவியுள்ளார். இதற்குக் காரணம் அவர் ஆலிஸ் ஹுவாங் என்ற சீனப் பெண்ணின் காதல் வலையில் சிக்கியதுதான்.

இந்தப் பெண் சீனாவின் உளவாளி என்று அமெரிக்க உளவுத் துறை அறிக்கை கூறுகிறது.

சீனாவுக்கு சில வகை சிப்புகளை ஏற்றுமதி செய்வதற்கு இப்போதுள்ள தடையை விலக்கிக்கொள்ளும்படி வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்கு ஜென்சன் அழுத்தம் தர வேண்டும் என்பதற்காகவும், தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக ரகசியங்களை அறிவதற்காகவும் ஆலிஸ் பயன்படுத்தப்பட்டுள்ளார் என்கிறது அமெரிக்க உளவுத் துறை. இந்த குற்றச்சாட்டை சீனா வழக்கம்போல மறுத்துள்ளது.

 ஒரு நாட்டின் ராணுவ ரகசியங்களை ஒற்றர்கள்மூலம் எதிரிகள் தெரிந்துகொள்வது புதிதல்ல. முக்கியமான பொறுப்புகளில் இருப்பவர்களை பெண்கள்மூலம் காதல் வலையில் சிக்க வைப்பதும், ரகசியங்களைக் கடத்துவதும் சீனர்களுக்கு கைவந்த கலை. அமெரிக்காவின் பல ஆய்வு ரகசியங்களைக் கடத்தியதாகப் பல சீனர்கள் பிடிபட்டு சிறையில் தள்ளப்பட்டுள்ளனர்.

என்விடியா நிறுவனத்தை உலக அளவில் முன்னிலைக்குக் கொண்டுவர 33 ஆண்டுகள் பாடுபட்ட ஜென்சன் உழைப்பும், அறிவும் ஒரு சில நாள்களில் காணாமல் போயின. அவரது பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொண்ட நிறுவனம், சிப் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக ரகசியங்கள் பிறருக்குப் பகிரப்படவில்லை என்று கூறியபோதிலும், அதன் பங்குகளின் விலை படுவேகமாக சரியத் தொடங்கிவிட்டன.

என்விடியா ஊழியர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த சிலிகான் வேலியும் ஜென்சன் ஹுவாங் மீண்டும் என்விடியாவின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறது. எலான் மஸ்க் உட்பட 1,65,000 பேர் அதற்கு ஆதரவாக திறந்த கடிதம் வெளியிட்டிருக்கிறார்கள். என்விடியாவை செயற்கை நுண்ணறிவின் (ஏ.ஐ.) விசை சக்தியாக மாற்றிய ஜென்சன் ஹுவாங்குக்கு மாற்று இல்லை என்பது அவர்களது வாதம்.

சீன ராணுவ தந்திரங்கள் குறித்த நூல் 'மேய்ரென் ஜி'; அதில் 36 உத்திகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இந்த நூல் தொன்றுதொட்டு சீன அரசர்களுக்கு அறிவுரையாக கற்றுக் கொடுக்கப்பட்டது.

கி.மு. 475-கி.மு. 221 காலகட்டங்களில் சீனாவில் இருந்த பல நாடுகள் ஒன்றுகொன்று போரிட்டு வந்த காலத்தில் வாய்மொழிமூலம் பல்வேறு ராணுவத் தளபதிகளால் முன்மொழியப்பட்ட உத்திகளைத் தொகுத்து உருவாக்கப்பட்டதுதான் 'மேய்ரென் ஜி' என்கிற பட்டறிவு.

தனி நபர் உறவுகளைப் பயன்படுத்தி அரசியல் எதிரிகளை பலவீனப்படுத்துவது அல்லது வீழ்த்துவது என்பது மேய்ரென் ஜி நூலில் குறிப்படப்பட்டிருக்கும் 31-ஆவது உத்தி. எதிரியின் தனிப்பட்ட ஆசைகள், உணர்வுகள், உறவுகள் உள்ளிட்டவற்றில் காணப்படும் பலவீனங்களைப் பயன்படுத்தி அவர்களது தலைமைக்குக் களங்கம் ஏற்படுத்துவது என்பதுதான் அந்த உத்தியின் சாராம்சம். எதிரிகளின் முடிவெடுக்கும் திறமையை பலவீனப்படுத்துவதன்மூலம் அவர்களைப் போரில் தோற்கடிப்பது, அவர்களது படையை பலவீனப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து 'மேய்ரென் ஜி'யின் 36 உத்திகளும் விரிவாக எடுத்துரைக்கின்றன.

நவீன ஒற்றாடல் நடவடிக்கைகளில் பாலியல் உறவுகள் மூலமும், காதல் வலையில் வீழ்த்துவதன் மூலமும் முக்கியமான தகவல்களை எதிரிகளிடமிருந்து பெறுவதற்கு சீனர்கள் தயங்குவதே இல்லை. 'ஹனி டிராப்' எனப்படும் ஆசை வலையில் வீழ்த்துவது ஒரு வகையில் மேய்ரென் ஜி யின் 31-ஆவது உத்தியின் ஒரு பகுதி என்று கொள்ளலாம். சீனர்கள் மட்டுமல்லாமல், ரஷியர்களும் கூட இந்த உத்தியைப் பனிப்போர் காலங்களில் பயன்படுத்தி இருக்கின்றனர். தற்போதைய ஆலிஸ் ஹுவாங் வலையில் என்விடியா தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங் வீழ்த்தப்பட்டிருப்பதும்கூட சீனாவின் கைவரிசையாக இருந்தால் வியப்படையத் தேவையில்லை.

ஆட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பல வலிமையான அரசர்களின் தனிப்பட்ட பலவீனம் காரணமாக வீழ்த்தப்பட்டிருக்கிறார்கள். இன்றைய அரசியல் தொழில்நுட்ப ஆதிக்கம் வேறுவிதமாக மாறியிருந்தாலும்கூட தனிப்பட்ட உறவுகள் எதிரிகளால் பயன்படுத்தக்கூடிய பலவீனங்களாகத் தொடர்கின்றன.

ஜென்சன் ஹுவாங்கின் தலைமையை இழக்க என்விடியாவின் நிர்வாகம் தயாராக இருக்கலாம்; நுண்ணறிவு உலகம் தயாராக இருக்கிறதா?.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.