ரஷிய போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி ஒப்புதல்!
லிபியா கடற்பரப்பில் ரஷியப் போர்க்கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதல்பற்றி...

லிபியா கடற்பரப்பில் ரஷியப் போர்க்கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலை உக்ரைனே நடத்தியதாக அந்நாட்டு அதிபர் ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.
உக்ரைன் சொந்தமாகத் தயாரித்த 7 டிரோன்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், தாக்குதலில் அந்தக் கப்பல் கடலில் மூழ்கடிக்கப்பட்டதாகவும் ஸெலென்ஸ்கி பதிவிட்டுள்ளார்.
உக்ரைன் மீதான படையெடுப்பின்போது 2023-ல் ரஷியா பயன்படுத்திய புதிய கப்பல்களில் இதுவும் ஒன்று என ஸெலென்ஸ்கி குறிப்பிட்டார்.
Advertisement
Advertisement
அவரது பதிவில், “குறிப்பிட்ட கடற்பரப்பில் நாங்கள் ராணுவ நடவடிக்கைகளைத் தொடர்வோம். ரஷியாவின் ஆக்கிரமிப்புக்கு பதிலடி கொடுப்போம். உக்ரைனில் சொந்தமாக நாங்கள் ஆயுதங்களை உருவாக்கி வருகிறோம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், ஆயுதங்களைக் கொண்டு செல்ல ரஷியா பயன்படுத்திய மற்றொரு கப்பலான எம்.வி. அங்காரா மீதும் உக்ரைனியப் படைகள் தாக்குதல் நடத்தியதாக ஸெலென்ஸ்கி தெரிவித்தார். இந்தத் தாக்குதலில் ஒரு ராணுவ ஹெலிகாப்டர் தாக்கி அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், நிர்ணயித்த இலக்குகளை அடைந்துவிட்டதாக ஸெலென்ஸ்கி குறிப்பிட்டார்.
லிபிய அதிகாரிகள் இந்தத் தாக்குதல் பற்றிக் கூறுகையில், கிழக்கு லிபியாவில் உள்ள பெங்காசி கடற்படைத் தளத்தில் இருந்த ரஷிய போர்க்கப்பல் டிரோன் தாக்குதலால் கடுமையாக சேதமடைந்ததாகக் கூறினர்.
ரஷியாவிற்கும் லிபியாவின் கிழக்குப் பகுதியைத் தளமாகக் கொண்ட அரசிற்கும் இடையேயான ஒப்பந்தத்தின் பேரில் எரிபொருள் நிரப்பவும், பொருள்களை ஏற்றவும் ரஷியக் கப்பல் அங்குள்ள துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால், அதிலிருந்த பொருள்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.