2025-ல் உறவினர்களால் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 5 பெண்கள் கொல்லப்பட்டனர்: ஐ.நா. அறிக்கை!
2025 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 47,000-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் உறவினர்களால் கொல்லப்பட்டதாக ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 47,000-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் உறவினர்களால் கொல்லப்பட்டதாக ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, உலகம் முழுவதும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 5 பெண்கள் மற்றும் சிறுமிகள் உறவினர்களால் கொல்லப்பட்டனர் என அறிக்கை குறிப்பிடுகின்றது. இது முந்தைய ஆண்டுகளின் எண்ணிக்கையில் பெரிய மாற்றங்களின்றி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக இவ்வாறு உறவினர் அல்லது இணையரால் பெண்கள் கொல்லப்படும் எண்ணிக்கை ஆண்டுதோறும் 45,000 முதல் 51,000 வரை ஏற்ற இறக்கத்தில் இருந்து வருவதாக ஐ.நா. பெண்கள் அமைப்பு மற்றும் ஐ.நா. போதைப்பொருள் மற்றும் குற்றப்பிரிவு அலுவலகம் ஆகியவை மதிப்பிட்டுள்ளன.
Advertisement
Advertisement
சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான நாளை முன்னிட்டு வெளியான இந்த அறிக்கையில், கடந்தாண்டில் உலகம் முழுக்க 78,000 பெண்களும் சிறுமிகளும் திட்டமிட்டு கொல்லப்பட்டதாகவும் அதில் 60% பேர் உறவினர்கள் மற்றும் இணையரால் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், குறிப்பிட்ட 47,000 எண்ணிக்கையில் ஒரு நாளைக்கு 129 பெண்கள் வீதம் கொல்லப்பட்டுள்ளனர். இதில், 122 நாடுகளில் இருந்து பெறப்பட்ட புள்ளிவிவரங்களை ஆய்வு செய்து இந்த எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது.
”குடும்ப வன்முறையைத் தடுப்பதில் குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களை மட்டுமின்றி, மிக நெருங்கிய உறவுகளையும் கணக்கில் கொள்ளவேண்டும்” என ஐ.நா. தெரிவித்துள்ளது.
உலகின் எந்தப் பகுதியும் பெண்களுக்கு முழுமையாகப் பாதுகாப்பாக இல்லை என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உறவினர்கள் அல்லது இணையரால் பெண்களும் சிறுமிகளும் கொல்லப்பட்டதில் அதிகபட்ச எண்ணிக்கையாக 22,100 பேருடன் ஆப்ரிக்கா முதலிடத்தில் உள்ளது. 15,100 பேருடன் ஆசியா, 7,400 பேருடன் அமெரிக்கா, 2,100 பேருடன் ஐரோப்பா பிராந்தியங்கள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.
தனிப்பட்ட வாழ்வுக்கு வெளியே நிகழும் பெண் கொலைகள் பற்றிய தரவுகள் மிகக் குறைவாகவே உள்ளன. இதனால், உலகளவில் சரியான எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிடுவதும், பெண்கள் மீதான வன்முறையை பற்றியத் தரவுகளைச் சேமிப்பதும் சாத்தியமற்றது என்பதும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.