ரோஹிங்கியா இனப்படுகொலை! சர்வதேச நீதிமன்றத்துக்கு இணங்க முடியாது! - மியான்மர் அறிவிப்பு!
சர்வதேச நீதிமன்றம் விதித்துள்ள தீர்ப்பின் சில அம்சங்களுக்கு இணங்க முடியாது என மியான்மர் அரசு அறிவிப்பு...

ரோஹிங்கியா இனப்படுகொலை விவகாரத்தில், சர்வதேச நீதிமன்றம் விதித்துள்ள முக்கிய தீர்ப்பின் சில அம்சங்களுக்கு இணங்க முடியாது என மியான்மரின் ராணுவ அரசு அறிவித்துள்ளது.
மியான்மர் நாட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு முஸ்லீம்கள் அதிகமுள்ள சிறுபான்மை சமூகத்தினரான ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக அரசு இனப்படுகொலையில் ஈடுபட்டது உறுதியானதாக, சர்வதேச நீதிமன்றம் நவ. 19 ஆம் தேதி அதிரடியாகத் தீர்ப்பு வழங்கியது.
இந்த நிலையில், இன்று (நவ. 26) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஏற்ப செயல்படுவோம் எனக் கூறிய மியான்மர் ராணுவ அரசின் தலைவர் மின் ஆங் ஹ்லைங், அந்தத் தீர்ப்பில் பொருத்தமற்றவை எனக் கருதப்படும் சில அம்சங்களுக்கு இணங்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, இந்தத் தீர்ப்பானது ஒருதலைப்பட்சமான குற்றச்சாட்டு எனவும், இனப்படுகொலை எனும் வார்த்தை மியான்மரின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியதாகவும், மின் ஆங் ஹ்லைங் கூறியுள்ளார்.
மியான்மர் படைகள் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா மக்களைக் கொன்றதுடன், பாலியல் வன்கொடுமைகள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் தப்பியோடிய மக்கள் மீது நடத்திய தாக்குதல் ஆகியவற்றுக்கு ஆதாரம் இருப்பதாக, சர்வதேச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இத்துடன், நாட்டை விட்டு வெளியேறிய ரோஹிங்கியா மக்கள் தங்களின் தாயகத்துக்குத் திரும்ப மியான்மர் அரசு அனுமதிக்க வேண்டுமென உத்தரவிட்ட சர்வதேச நீதிமன்றம், ஒரு நாட்டின் அரசு இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ளது எனத் தீர்ப்பளித்தது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.