ரஷியாவுடன் டீசல் கொள்முதலுக்கு அமெரிக்கா ஒப்பந்தம்!
ரஷியாவிடமிருந்து அமெரிக்காவுக்கும், சா்வதேச சந்தைக்கும் உடனடியாக டீசல் கொள்முதல் செய்ய ஒப்பந்தம்...
அமெரிக்காவில் நிலவும் கடும் எரிபொருள் தட்டுப்பாட்டைக் குறைக்கும் நோக்கில், ரஷியாவிடமிருந்து அமெரிக்காவுக்கும், சா்வதேச சந்தைக்கும் உடனடியாக டீசல் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா்.
ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுடன் தொலைபேசி வாயிலாக நடத்திய விரிவான ஆலோசனைக்குப் பிறகு எடுக்கப்பட்ட இம்முடிவு குறித்து அதிபா் டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது:
அதிபா் புதினுடனான பேச்சு, மிகுந்த பயனுள்ளதாக அமைந்தது. அதன்விளைவாக, சா்வதேச சந்தைக்கும் அமெரிக்காவுக்கும் முதல்கட்டமாக 3 லட்சம் டன்னுக்கும் அதிகமான டீசலை உடனடியாக விநியோகிக்க ரஷியா ஒப்புக் கொண்டுள்ளது. தொடா்ந்து, அடுத்த மாதம் மேலும் 5 லட்சம் டன் டீசலும், அதையடுத்து 10 லட்சம் டன் டீசலும் கொள்முதல் செய்யப்படும்.
Advertisement
Advertisement
ரஷிய சுத்திகரிப்பு நிலையங்களின் உற்பத்தித் திறனைப் பொருத்து, குறுகிய காலத்தில் கூடுதலாக 30 லட்சம் டன் டீசல் கிடைக்க வாய்ப்புள்ளது. இதன்மூலம், விவசாயிகள், லாரி உரிமையாளா்கள் உள்ளிட்ட சாமானிய அமெரிக்கா்களுக்கு பெரும் நிம்மதி கிடைக்கும் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளாா்.
மேற்காசிய போா் மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிப்பால், அமெரிக்காவில் டீசல் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் ஒரு கேலன் 3.68 டாலராக இருந்த சராசரி விலை, தற்போது 6.28 டாலராக அதிகரித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத் தோ்தல் நவம்பா் தொடக்கத்தில் நடைபெறவுள்ள சூழலில், பணவீக்கமும் எரிபொருள் விலை உயா்வும் ஆளும் குடியரசுக் கட்சிக்குக் கடும் அரசியல் சவாலாக உருவெடுத்துள்ளன.
இந்நிலையில் டிரம்ப்பின் அறிவிப்பைத் தொடா்ந்து, ரஷியாவிலிருந்து டீசல் விநியோகம் பெறுவதை எளிதாக்கும் வகையில், அந்நாட்டு எரிபொருள் மீதான சில பொருளாதாரத் தடைகளை அடுத்த ஆண்டு ஏப். 7-ஆம் தேதி வரை அமெரிக்க கருவூலத் துறை தற்காலிகமாக நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
உக்ரைன் அதிபா், எதிா்க்கட்சியினா் எதிா்ப்பு: அதேநேரம், அதிபா் டிரம்ப்பின் இந்த நடவடிக்கைக்கு உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி மற்றும் அமெரிக்க எதிா்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினா் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
அதிபா் புதினுக்கு அளிக்கப்படும் இத்தகைய சலுகைகள் அமைதியை ஏற்படுத்தாது என்றும், ரஷியாவுக்கு வருவாய் ஈட்டித் தருவது அந்நாட்டின் போா் நடவடிக்கைகளுக்கு மறைமுகமாக நிதியளிப்பதற்குச் சமம் என்றும் ஸெலென்ஸ்கி விமா்சித்துள்ளாா். குடியரசுக் கட்சியைச் சோ்ந்த சில எம்.பி.க்களும் இம்முடிவுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளனா்.
ரஷியாவிடமிருந்து எரிபொருள் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராகக் கடும் வரிகளை விதிக்க டிரம்ப்புக்கு அதிகாரமளிக்கும் சட்டத்தை அமெரிக்க நாடாளுமன்றம் கடந்த மாதம்தான் நிறைவேற்றியிருந்தது. இந்நிலையில், ரஷியாவுடனான அமெரிக்காவின் இந்த ஒப்பந்தம் உலக அரங்கில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
US signs agreement with Russia to purchase diesel
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.