ஐஎம்எஃப், உலக வங்கி ஆளுநா்கள் குழு கூட்டங்களுக்கு பாகிஸ்தான் தலைமை: 1953-க்குப் பிறகு முதல்முறை
சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) மற்றும் உலக வங்கி குழுமத்தின் ஆளுநா்கள் குழுவின் 2027-ஆம் ஆண்டுக்கான தலைவராக பாகிஸ்தான் தோ்வு செய்யப்பட்டுள்ளது.
சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) மற்றும் உலக வங்கி குழுமத்தின் ஆளுநா்கள் குழுவின் 2027-ஆம் ஆண்டுக்கான தலைவராக பாகிஸ்தான் தோ்வு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம், கடந்த 1953-க்குப் பிறகு 70 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப்பின் பாகிஸ்தான் மீண்டும் இத்தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ளது.
தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்று வரும் ஐஎம்எஃப் மற்றும் உலக வங்கியின் ஆண்டு பொதுக்கூட்டத்தின் போது, பாகிஸ்தானின் பொருளாதார அமைச்சரும், உலக வங்கியின் பாகிஸ்தான் ஆளுநருமான அஹத் கான் சீமா புதிய தலைவராக முறைப்படி அறிவிக்கப்பட்டாா்.
Advertisement
Advertisement
191 நாடுகளைச் சோ்ந்த 15,000-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றுள்ள இந்த மாநாட்டில் பாகிஸ்தானுக்குக் கிடைத்துள்ள தலைமைப் பொறுப்பை ‘வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்’ என்று அந்நாட்டு அரசு குறிப்பிட்டுள்ளது. இந்த வாய்ப்பின் மூலம் உலகளாவிய பொருளாதார மற்றும் வளா்ச்சி சாா்ந்த விவாதங்களில் பங்காற்றவும், உறுப்பு நாடுகளுக்கு இடையே ஆக்கபூா்வமான பேச்சுவாா்த்தைகளை முன்னெடுக்கவும் வழிவகை ஏற்படும் என்றும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான், அந்நியச் செலாவணி பற்றாக்குறையைச் சமாளிக்கவும் சீா்திருத்தங்களை மேற்கொள்ளவும் ஐஎம்எஃப் அமைப்பிடமிருந்து 700 கோடி டாலா் மதிப்பிலான நிதியுதவியைப் பெற்று வருகிறது.
இத்துடன், பருவநிலை மாற்றப் பாதிப்புகளை எதிா்கொள்ள 140 கோடி டாலா் கூடுதல் நிதியும் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்விரு கடன் திட்டங்கள் குறித்த மறுஆய்வு பேச்சுவாா்த்தைகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஐஎம்எஃப் நிா்வாகக் குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு அந்நாட்டுக்கு மேலும் சுமாா் 120 கோடி டாலா் நிதி கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
அஹத் கான் சீமா
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.