தாய்லாந்தில் விசா இல்லாமல் 30 நாள்கள் மட்டுமே தங்க முடியும்! விதிமுறைகளில் திருத்தம்!
தாய்லாந்தில் விசா இல்லாமல் தங்கும் திட்டத்தை 30 நாள்களாக குறைக்கப்பட்டது பற்றி...
இந்தியா உள்பட 60 நாடுகளைச் சேர்ந்தவர்கள் தாய்லாந்தில் விசா இல்லாமல் தங்கும் காலத்தை குறைத்து விதிமுறைகளில் அந்நாட்டு அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது.
தாய்லாந்து நாட்டுக்கு ஓராண்டுக்கு சுமார் 3 கோடிக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் செல்கிறார்கள். அதிகபட்சமாக மலேசியா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிகளவிலானோர் சுற்றுலாச் செல்கிறார்கள்.
அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள், முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில், இந்தியா உள்பட 60 நாடுகளைச் சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் 60 நாள்கள் வரை தங்கிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், விசா இல்லாமல் தங்கும் காலத்தை 60 நாள்களிலிருந்து 30 நாள்களாக குறைத்து விதிமுறைகளில் தாய்லாந்து அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது.
இந்த புதிய விதிமுறை வருகின்ற செப்டம்பர் 15 முதல் அமலாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ஆஸ்திரேலியா, கனடா, இந்தியா, ஜப்பான் உள்பட 60 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இனி 30 நாள்கள் மட்டுமே விசா இல்லாமல் தங்கிக் கொள்ள முடியும்.
சீஷெல்ஸ் மற்றும் மொரிஷியஸ் நாட்டிலிருந்து தாய்லாந்துக்கு சுற்றுலா செல்பவர்கள் 15 நாள்கள் அனுமதி அளிக்கப்படுகிறது.
மலேசியா, புருனே, இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் நாட்டினரைத் தவிர மற்ற நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே தரைவழி எல்லை வழியாக தாய்லாந்துக்குள் நுழைய அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத வணிகம் போன்ற வெளிநாட்டினருடன் தொடர்புடைய குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Visa-free stay in Thailand limited to 30 days! Rules amended!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.