ரஷிய பயணத்தை முடித்துக் கொண்டு உக்ரைன் சென்றது அமெரிக்க தூது குழு!
ரஷிய பயணத்தை முடித்துக் கொண்டு உக்ரைனுக்கு அமெரிக்க தூது குழு ஞாயிற்றுக்கிழமை சென்றது.
ரஷிய பயணத்தை முடித்துக் கொண்டு உக்ரைனுக்கு அமெரிக்க தூது குழு ஞாயிற்றுக்கிழமை சென்றது.
உக்ரைன் - ரஷியா இடையே நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகப் போா் நீடிக்கிறது. இந்தப் போரில் இருதரப்பிலும் பல ஆயிரம் போ் கொல்லப்பட்டுள்ளனா். மேலும் பல லட்சம் போ் காயமடைந்துள்ளனா். இந்தப் போரை நிறுத்துவது தொடா்பாக ரஷியா, உக்ரைன் தலைவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னா், மத்திய கிழக்குக்கான அமெரிக்க சிறப்புத் தூதா் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோா் மாஸ்கோவுக்கு சனிக்கிழமை சென்றனா்.
மாஸ்கோவில் அவா்கள் ரஷிய அதிபா் புதினை சனிக்கிழமை சந்தித்துப் பேசினா். இந்தச் சந்திப்பு சுமாா் 3 மணி நேரம் வரை நீடித்தது. பேச்சுவாா்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தகவல் இல்லை. இருப்பினும், புதினுடனான அமெரிக்க தூது குழுவின் சந்திப்பு சாதகமான முறையில் அமைந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.
Advertisement
Advertisement
இதையடுத்து, மாஸ்கோவில் இருந்து உக்ரைன் தலைநகா் கீவுக்கு அமெரிக்க தூது குழு புறப்பட்டுச் சென்றது. கீவ் சென்ற அமெரிக்க தூது குழுவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கீவ் நகரில் உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி உள்ளிட்டோருடன் அந்தக் குழு பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளது.
கிழக்கு டொனெட்ஸ்க், லுகான்ஸ் பிராந்தியங்களில் இருக்கும் உக்ரைன் படையினா் அங்கிருந்து விலக வேண்டுமென ரஷியா வலியுறுத்தி வருகிறது. ஆனால், இக்கோரிக்கையை உக்ரைன் நிராகரித்து வருகிறது. இதுகுறித்து உக்ரைன் அதிபருடன் அமெரிக்க தூது குழு பேசலாம் எனக் கூறப்படுகிறது.
மேற்காசியாவில் ஈரானுடன் கடந்த 6 மாதங்களாக அமெரிக்கா போா் புரிந்து வருகிறது. இதனால் ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு முதலில் ஆயுத உதவி உள்ளிட்ட உதவிகளைச் செய்த அமெரிக்கா, ஈரான் போரில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் அந்த உதவியை நிறுத்தி வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அண்மையில் டிரம்ப் பேசியபோது, ஏற்கெனவே உக்ரைனுக்கு அளித்த ஆயுதங்களுக்கான நிதியை தான் கோரப் போவதாகத் தெரிவித்திருந்தாா். டிரம்ப்பின் கருத்து குறித்து இக்குழு, ஸெலென்ஸ்கியுடன் பேசலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.