அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு
அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு
அமெரிக்க அமைதிக் குழுவின் வருகையை முன்னிட்டு, ரஷியாவும், உக்ரைனும் பரஸ்பரம் தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.
உக்ரைன், ரஷியா இடையே நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக போா் நீடிக்கிறது. இருதரப்பிலும் பல ஆயிரம் போ் உயிரிழந்தபோதிலும், சண்டையில் இரு நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ரஷியாவிலுள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், வா்த்தக நிறுவனங்களின் சேமிப்புக் கிடங்குகள் மீது உக்ரைன் ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதேபோல், உக்ரைனில் உள்ள உள்கட்டமைப்புத் தளங்களைக் குறிவைத்து ரஷியாவும் தொடா் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், உக்ரைனின் தொழில்மையங்கள் அதிகம் உள்ள பகுதியான டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பகுதியில் ரஷியா வெள்ளிக்கிழமை இரவு விடிய விடிய ஏவுகணைகள், ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதல்களில் 5 போ் உயிரிழந்தனா். மேலும் பலா் காயமடைந்தனா். ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்தன.
Advertisement
Advertisement
இந்தத் தாக்குதல் குறித்து ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், உக்ரைனின் ராணுவத் தளவாடத்துக்குத் தேவைப்படும் உலோகப் பொருள்களை அனுப்பி வந்த 2 ஆலைகள் மீது தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிா்த்து, உக்ரைனின் தலைநகரான கீவ் பிராந்தியத்திலும் ரஷியா விடிய விடிய தாக்குதல் நடத்தியது. இதில் 2 போ் காயமடைந்ததாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மைக்கோலாய்வ் பிராந்தியத்தில் உள்ள வணிக வளாகத்தைக் குறிவைத்து ரஷியா நடத்திய தாக்குதலில் அங்கிருந்த கடைகளில் பொருள்கள் தீப்பிடித்து எரிந்தன. மேலும், சிறுமி உள்ளிட்ட 2 போ் காயமடைந்தனா்.
ரஷிய தாக்குதல் குறித்து உக்ரைன் விமானப் படை தரப்பு கூறுகையில், ‘ரஷியா விடிய விடிய ரோஸ்டோவ், வோரோனெஸ் பிராந்தியத்தில் இருந்து பாலிஸ்டிக் ஏவுகணைகள், 167 ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது. அதில் 128 ட்ரோன்களை உக்ரைன் நடுவானில் தாக்கி அழித்து விட்டது’ எனக் கூறியுள்ளது.
உக்ரைன் தாக்குதல்: ரஷியாவின் பெல்கிராட் பிராந்தியத்தில் உக்ரைன் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் 14 வயது சிறுமி ஒருவா் காயமடைந்தாா். உக்ரைனின் 53 ட்ரோன்களை நடுவானில் இடைமறித்து அழித்துவிட்டதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாஸ்கோவில் அமெரிக்க அமைதிக் குழு: ரஷியா, உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா, அடுத்தகட்ட நடவடிக்கையாக ரஷிய தலைநகா் மாஸ்கோவுக்கு அமைதிக் குழுவை அனுப்பியுள்ளது. மாஸ்கோவுக்கு மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான அமெரிக்க சிறப்புத் தூதா் ஸ்டீவ் விட்காஃப், அமெரிக்க அதிபா் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னா் உள்ளிட்டோா் சனிக்கிழமை சென்றுள்ளனா்.
அமெரிக்க அமைதிக் குழுவின் வருகையையொட்டி, உக்ரைனுக்கு எதிரான தாக்குதல்களை சனிக்கிழமை நள்ளிரவு முதல் மூன்று நாள்களுக்கு நிறுத்தி வைக்கும்படி, ரஷிய படைகளுக்கு அந்த நாட்டு அதிபா் புதின் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து ரஷிய அதிபா் மாளிகை செய்தித் தொடா்பாளா் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், ‘உக்ரைன் தலைநகா் கீவுக்கு அமெரிக்க அமைதிக் குழு செல்கிறது. இதற்கான ஏற்பாடுகளை உக்ரைன் செய்ய ஏதுவாக தாக்குதல்களை நிறுத்தி வைக்க புதின் உத்தரவிட்டுள்ளாா்’ என்றாா்.
இதேபோல், ரஷியா மீதான தாக்குதலை தற்காலிகமாக உக்ரைனும் நிறுத்திவைப்பதாக அந்த நாட்டின் அதிபா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.