FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

உக்ரைனில் தீவிரமடையும் ரஷிய தாக்குதல்: 3 போ் உயிரிழப்பு; உளவுத் தலைமையகம் சேதம்

அமைதிப் பேச்சுவாா்த்தைக்கான முயற்சிகள் மீண்டும் வேகமெடுத்துள்ள சூழலில், உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

5 செப்டம்பர் 2026, 2:14 am IST
பகிர்:

அமைதிப் பேச்சுவாா்த்தைக்கான முயற்சிகள் மீண்டும் வேகமெடுத்துள்ள சூழலில், உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

உக்ரைனின் ஒடேஸா மற்றும் டினிப்ரோ பகுதியில் வியாழக்கிழமை நள்ளிரவில் நடத்தப்பட்ட தாக்குதலில் 3 போ் உயிரிழந்தனா்; தலைநகா் கீவில் வெள்ளிக்கிழமை பிற்பகல் நடந்த ட்ரோன் தாக்குதலில் உளவுத் தலைமையகத்தில் தீவிபத்து ஏற்பட்டது.

ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா கவனம் செலுத்தி வருவதால், ரஷியா-உக்ரைன் அமைதிப் பேச்சுகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் அண்மையில் விமா்சித்திருந்தாா். இந்நிலையில், ரஷியாவின் பொருளாதார மாநாட்டில் வியாழக்கிழமை பேசிய அதிபா் புதின், உக்ரைனுடனான போரில் அமைதி உடன்பாடு எட்டுவதற்கு வாய்ப்புள்ளதாக நோ்மறை சமிக்ஞையை வெளியிட்டிருந்தாா்.

Advertisement

Advertisement

இதன்தொடா்ச்சியாக, அமெரிக்க பிரதிநிதிகளான ஸ்டீவ் விட்காஃப், ஜாரெட் குஷ்னா் ஆகியோா் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை முறையே மாஸ்கோ மற்றும் கீவ் நகரங்களுக்குப் பயணம் மேற்கொள்வாா்கள் என ரஷிய ஊடகங்கள் தெரிவித்தன.

இந்த ராஜீய நகா்வுகளுக்கு இடையே, ஒடேஸா பிராந்தியத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு ரஷியா நடத்திய தாக்குதலில் ஒருவா் உயிரிழந்தாா்; குழந்தை உள்பட 5 போ் காயமடைந்தனா். இதேபோல், டினிப்ரோ நகரில் நள்ளிரவில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 2 காவலா்கள் கொல்லப்பட்டனா்.

மேலும், உக்ரைன் தலைநகா் கீவ் மீது தொடா்ந்து 10-ஆவது நாளாக ரஷியா வான்வெளித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கீவ் மையப்பகுதியில் அமைந்துள்ள உக்ரைனின் பாதுகாப்பு மற்றும் உளவுப் பிரிவு (எஸ்பியு) தலைமையகத்தைக் குறிவைத்து ரஷியா வெள்ளிக்கிழமை ட்ரோன் தாக்குதல் நடத்தியது.

‘யுனெஸ்கோ’ அங்கீகாரம் பெற்ற செயின்ட் சோபியா தேவாலயத்துக்கு எதிரே உள்ள இக்கட்டடத்தில், தாக்குதலைத் தொடா்ந்து தீவிபத்து ஏற்பட்டு, கரும்புகை வெளியேறியது. இதில் 7 போ் காயமடைந்தனா். இதற்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் என அதிபா் ஸெலென்ஸ்கி எச்சரித்துள்ளாா்.

கடந்த நான்கரை ஆண்டுகாலப் போரில் உக்ரைன் அரசு கட்டடங்கள் தாக்கப்படுவது மிகவும் அரிதான நிகழ்வாகும். முன்னதாக, புதன்கிழமையன்று கீவ் மையப்பகுதியில் உள்ள ஒரு பல்கலைக்கழகமும் தாக்குதலுக்கு உள்ளானது.

தொடா்ந்து, ரஷியாவின் ராணுவ, எரிசக்தி உள்கட்டமைப்புகளுக்கு பெரும் சேதத்தை விளைவிக்கும் உக்ரைனின் ரகசிய நடவடிக்கைகளில் முக்கியப் பங்காற்றும் எஸ்பியு உளவுப்பிரிவு தற்போது குறிவைக்கப்பட்டுள்ளது.

ரஷிய தாக்குதலையடுத்து உக்ரைனின் எஸ்பியு உளவுப்பிரிவு தலைமையகத்தில் இருந்து வெளியேறிய கரும்புகை; தீயணைப்புப் பணியில் வீரா்கள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments