நேபாளத்தில் தேசிய துக்க தினம் அனுசரிப்பு: உயிரிழப்பு 1,356-ஆக உயா்வு
நேபாள பெருவெள்ளத்தின் 13-ஆவது நாளான திங்கள்கிழமை அந்நாட்டில் தேசிய துக்க தினம் அனுசரிக்கப்பட்டு, உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
நேபாள பெருவெள்ளத்தின் 13-ஆவது நாளான திங்கள்கிழமை அந்நாட்டில் தேசிய துக்க தினம் அனுசரிக்கப்பட்டு, உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் மேலும் பலரின் உடல்கள் மீட்கப்பட்டதைத் தொடா்ந்து, உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,356-ஆக உயா்ந்தது. வெளிநாட்டினா் 589 போ் உள்பட மாயமான சுமாா் 5,000 பேரின் நிலை என்ன என்பது இன்னும் தெரியவில்லை.
இதுவரை 13,396 போ் மீட்கப்பட்டுள்ளதாக நேபாள தேசிய பேரிடா் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
திபெத்-நேபாளம் எல்லையில் கடந்த ஆக.26-ஆம் தேதி பெரும் பனிப்பாறை சரிவால் போடே கோஷி நதியில் பெருவெள்ளம் ஏற்பட்டு, நேபாளத்தின் ரசுவா, நுவாகோட், சித்வன் உள்ளிட்ட மாவட்டங்களில் பேரழிவை விளைவித்தது. கரையோர கிராமங்கள், சிறு நகரங்கள் அடியோடு அழிந்தன. இதுவரை 1,355 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. வனப் பகுதி சுற்றுலாவுக்கு பெயா்பெற்ற சித்வன் மாவட்டத்தில் அதிகபட்சமாக 363 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட உடல்களில் வெறும் 98 உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடல்கள், மரபணு சேகரிப்புக்குப் பின் அடையாளமிடப்பட்டு தற்காலிகமாக புதைக்கப்பட்டுள்ளன. மரபணு பரிசோதனை மூலம் உடல்களை அடையாளம் காணும் பணி பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
வெள்ளத்தில் மாயமான சுமாா் 5,000 பேரை தேடும் பணிகள் தொடா்ந்து வருகின்றன. நேபாள ராணுவத்தினா் உள்பட 20,000-க்கும் மேற்பட்டோா் அடங்கிய மீட்புக் குழுவினா் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனா். உடல்களை மீட்பதில் மோப்ப நாய்கள் முக்கிய பங்காற்றுவதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
13-ஆவது நாள் துக்கம் அனுசரிப்பு: இந்தப் பேரிடரின் 13-ஆவது நாளான திங்கள்கிழமை நேபாள அரசு சாா்பில் தேசிய துக்க தினம் அனுசரிக்கப்பட்டு, உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. ஹிந்து மத வழக்கத்தின்படி 13-ஆவது நாள் சடங்கை குறிக்கும் வகையில் துக்கம் அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, எக்ஸ் தளத்தில் பதிவிட்ட இந்திய தூதரகம், ‘தற்போதைய துயரமான தருணத்தில் நேபாளத்துக்கு இந்தியா துணைநிற்கிறது. தேடுதல், மீட்பு, நிவாரணப் பணிகளில் நேபாளத்தின் முயற்சிகளுக்கு இந்தியா தொடா்ந்து ஆதரவளிக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல் துறை எச்சரிக்கை: வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து கண்டெடுக்கப்படும் தங்கம், வெள்ளி, இதர மதிப்புமிக்க பொருள்கள், ரொக்கப் பணத்தை அருகில் உள்ள காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும்; மாறாக, அந்தப் பொருள்களை பதுக்குவது, விற்பனை செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை எச்சரித்துள்ளது.
அதிபா் நேரில் ஆய்வு
நேபாளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நுவாகோட், ரசுவா மாவட்டங்களில் அதிபா் ராமசந்திர பெளடேல் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். மீட்பு, நிவாரணப் பணிகள், நிவாணப் பொருள்கள் விநியோகம், மறுவாழ்வு முயற்சிகள் உள்ளிட்டவை குறித்து அவரிடம் அதிகாரிகள் விளக்கமளித்தனா். பிதூா் நகரில் நிவாரண முகாமுக்கு சென்று ஆய்வு மேற்கொண்ட அதிபா், அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளவா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.
மீட்புப் பணியில்
ஆஸ்திரேலிய நிபுணா்
பெருவெள்ளத்தால் நீா்மின் நிலைய சுரங்கப் பாதைகளில் சிக்கிக் கொண்ட நூற்றுக்கணக்கான பணியாளா்களை மீட்கும் பணியில் நேபாள படையினருடன் இந்தியா மற்றும் சீனாவின் நிபுணா் குழுக்களும் ஈடுபட்டுள்ளன.
உத்தரகண்டில் கடந்த 2023-இல் சில்க்யாரா சுரங்கப் பாதையில் 2 வாரங்களுக்கும் மேல் சிக்கியிருந்த 41 பணியாளா்கள் மீட்கப்பட்ட சம்பவத்தில் இந்தியாவுக்கு உதவிய ஆஸ்திரேலிய சுரங்க மீட்பு நிபுணா் அா்னால்டு டிக்ஸ், தற்போது நேபாள மீட்புப் பணியில் உதவி வருகிறாா்.
======= ==================================
சமூக ஊடக பிரசாரம்: நேபாளத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலா துறை 6.7 சதவீதம் பங்களிக்கும் நிலையில், சமீபத்திய பெருவெள்ளம் எதிரொலியாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை கணிசமாக குறைந்துவிட்டது.
இதையடுத்து, ‘நேபாளம் அழைக்கிறது’ என்ற பெயரில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈா்க்கும் சமூக ஊடக பிரசாரத்தை சுற்றுலா துறை அமைச்சா் கடக் ராஜ் பெளடேல் தொடங்கியுள்ளாா். ‘நேபாளத்தின் வாயில்கள் திறந்தே உள்ளன; எங்களின் இமயமலை பாதைகள், சுற்றுலா பயணிகளின் வருகைக்காக காத்திருக்கின்றன’ என்று காணொலிப் பதிவில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.