அணு ஆயுதங்களைத் தயாரிக்கவில்லை, ஆனால்..! நியூயார்க் ஐநா கூட்டத்தில் ஈரான் அதிபர் பேச்சு!
நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. பொது அவைக் கூட்டத்தில் ஈரானிய அதிபர் பெஷேஷ்கியன் பேச்சு...
ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்கவில்லை; ஆனால், அணுசக்தி தொழில்நுட்பத்தைப் பெறுவதற்கு ஈரானுக்கு உரிமை உள்ளது என ஐக்கிய நாடுகள் பொது அவைக் கூட்டத்தில் ஈரானிய அதிபர் மசூத் பெஷேஷ்கியன் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் ஐக்கிய நாடுகள் பொது அவையின் 81 ஆவது கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது. இந்தக் கூட்டத்தில், ஏராளமான உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்று உரையாற்றி வருகின்றனர்.
அமெரிக்கா உடனான போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நியூயார்க் ஐ.நா. கூட்டத்தொடரில் ஈரானிய அதிபர் பெஷேஷ்கியன் இன்று (செப். 23) பங்கேற்று உரையாற்றியுள்ளார். அதிபர் பெஷேஷ்கியன் தனது உரையைத் தொடங்கியவுடன் அமெரிக்க பிரதிநிதிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ஐ.நா. அவையில் அதிபர் பெஷேஷ்கியன் உரையாற்றுகையில்,
“எவ்வித சட்ட நடைமுறையோ அல்லது காரணமோ இல்லாமல் எங்களின் மதிப்புமிக்க தலைமை மதகுரு (அயதுல்லா அலி கமேனி) படுகொலை செய்யப்பட்ட ஒரு ஈரானில் இருந்து நான் வருகிறேன். உண்மையில், ஒரு பள்ளிக்கூடத்தின் மீது குண்டு வீசப்பட்ட ஒரு ஈரானில் இருந்து நான் வருகிறேன்.
அவர்கள் (அமெரிக்கா மற்றும் இஸ்ரேல்) எங்களின் பிராந்தியங்களைச் சுற்றிவளைத்து எங்கள் பல்கலைக்கழகங்கள், எங்கள் சுகாதார மையங்கள், எங்கள் பள்ளிக்கூடங்கள் மற்றும் எங்கள் கட்டமைப்புகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இவை அனைத்தும் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானவை.
எங்கள் நாட்டின் மீதான கோழைத்தனமான தாக்குதல்களுக்கும், ஆக்கிரமிப்புகளுக்கும் எங்களின் அப்பாவி மக்கள் இலக்காகினர். நாங்கள் மிகுந்த வலிமையுடன் எங்களைப் பாதுகாத்துக்கொண்டோம்.
கடந்த 200 ஆண்டுகளில் நாங்கள் யார் மீதும் தாக்குதல் நடத்தியது இல்லை. ஆனால், இன்று பிராந்திய பாதுகாப்புக்கு எங்களைக் காரணமாகக் கூறுகின்றனர். நாங்கள் பயங்கரவாதிகள் என முத்திரையிடப்படுகிறோம்.
ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்கவில்லை; ஆனால், அணுசக்தி தொழில்நுட்பத்தைப் பெறுவதற்கு ஈரானுக்கு உரிமை உள்ளது. அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத இஸ்ரேலிடம் அணு ஆயுதங்கள் இருக்கின்றன. ஆனால், ஈரானில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனக் கோரப்படுவது தெளிவான இரட்டை வேடத்தன்மையைக் காட்டுகிறது” எனக் கூறியுள்ளார்.
Iranian President Pezeshkian has asserted at the UNGA that Iran holds the right to acquire nuclear technology.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.