வறட்சி நிவாரணம் வழங்குவதில் அரசு மெத்தனம்: சித்தராமையா குற்றச்சாட்டு
மண்டியா, அக். 8: வறட்சி நிவாரண உதவிகளை வழங்குவதில் மாநில பாஜக அரசு மெத்தனமாக உள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார். மண்டியா மாவட்டத்தின் வறட்சி நிவாரணப் பணிகளின் ஆய்வுக
மண்டியா, அக். 8: வறட்சி நிவாரண உதவிகளை வழங்குவதில் மாநில பாஜக அரசு மெத்தனமாக உள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.
மண்டியா மாவட்டத்தின் வறட்சி நிவாரணப் பணிகளின் ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடந்தது. இதில் பங்கேற்ற சித்தராமையா பின் செய்தியாளர்களிடம் கூறியது:
வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வறட்சி நிவாரண உதவிகளை வழங்க மக்கள் பிரதிநிதிகள் இணைந்து அமலாக்கக் குழுக்களை அமைக்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட 21 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிலைமையை நேரில் கண்டறிய திட்டமிட்டுள்ளேன்.
Advertisement
Advertisement
பெரும்பாலான மாவட்டங்களில் மின்சாரம் மற்றும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. மக்கள் பெரும் துன்பத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
வறட்சி நிவாரணப் பணிகளை மேற்கொள்ளத் தேவையான நிதியை பாஜக அரசு இன்னும் விடுவிக்கவில்லை. மாநில அரசின் கருவூலம் காலியாக உள்ளது. மாநில மக்கள் வறட்சியால் உழன்று வரும் நிலையில், பாஜக அரசு வெகு விமரிசையாக தசரா விழா கொண்டாடிவருகிறது.
மின்வெட்டு சிக்கலை தீர்ப்பதில் அரசு தோல்வியடைந்துள்ளது. இப்பிரச்னைக்கு மத்திய அரசையும், தெலங்கானா போராட்டத்தையும் காரணம் காட்டுவது சரியல்ல.
மஜதவுடன் கூட்டணி கிடையாது: மாநிலத்தில் நிர்வாகச் சீர்கேட்டுக்கு அச்சாரமிட்டது 2006-ம் ஆண்டில் அமைந்த பாஜக-மஜத கூட்டணி அரசுதான்.
எல்லாத் தேர்தல்களிலும் தனித்துப் போட்டியிட காங்கிரஸ் முடிவு செய்துள்ளதால், மஜதவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.
இதன் பின்பு பேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சர் ஜகதீஷ் ஷெட்டர், வறட்சி பாதித்த மாவட்டங்களை அரசு அலட்சியப்படுத்தவில்லை என்றார். பாதிக்கப்பட்ட தாலுகாக்களுக்கு தானும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகக் கூறிய அவர், அமைச்சரவை மாற்றம் குறித்து முதல்வருடன் பேச்சு நடத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.