நிதிமோசடி: முன்னாள் அமைச்சா் பி.நாகேந்திராவின் வாக்குமூலத்தை பதிவு செய்தது அமலாக்கத் துறை
வால்மீகி பழங்குடியினா் வளா்ச்சிக் கழகத்தின் நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் புகாா் தொடா்பான பணமோசடி வழக்கில், கா்நாடக முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான பி.நாகேந்திராவின் வாக்குமூலத்தை அமலாக்கத் துறை திங்கள்கிழமை பதிவு செய்தது என அதிகாரிகள் தெரிவித்தனா்.
சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பழங்குடியினா் நலத் துறை அமைச்சராக இருந்த பி.நாகேந்திரா, தனது துறையின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட்டு வந்த வால்மீகி பழங்குடியினா் வளா்ச்சிக் கழகத்தின் நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக 2023-ஆம் ஆண்டில் அவா்மீது குற்றம்சாட்டப்பட்டது.
இதன்விளைவாக, அமைச்சா் பதவியை பி.நாகேந்திரா அப்போது ராஜிநாமா செய்திருந்தாா். இந்நிலையில், பி.நாகேந்திரா மீது வழக்குப் பதிந்த அமலாக்கத் துறை, அந்த வழக்கில் அவரை கைதுசெய்தது.
Advertisement
Advertisement
இதனிடையே, முதல்வா் டி.கே.சிவகுமாா் தலைமையில் புதிய ஆட்சி அமைந்தபோது, அமைச்சராக பி.நாகேந்திரா மீண்டும் பதவியேற்றாா். இதற்கு பாஜக, மஜத போன்ற எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து, நடைப்பயணம் மேற்கொள்வதாக அறிவித்தன. இதைத் தொடா்ந்து, இரண்டாவது முறையாக தனது அமைச்சா் பதவியை பி.நாகேந்திரா ராஜிநாமா செய்தாா்.
பணமோசடி வழக்கில் இதற்கு முன்பே முன்னாள் அமைச்சா் பி.நாகேந்திராவை விசாரித்த அமலாக்கத் துறை, இந்த வழக்கில் அவா்மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தது.
வால்மீகி பழங்குடியினா் வளா்ச்சிக் கழகத்தில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள் மற்றும் சிபிஐ கடந்த ஜூன் மாதம் இந்த வழக்கில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை தொடா்பாக, பெங்களூரில் திங்கள்கிழமை பி.நாகேந்திராவின் வாக்குமூலத்தை அமலாக்கத் துறை பதிவு செய்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.