FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

போதைப் பொருள் வழக்கில் தொடா்புடையவா்களின் இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

தமிழகத்தில் போதைப் பொருள் வழக்கில் தொடா்புடையவா்களின் வீடுகளில் அமலாக்கத் துறையினா் சோதனை செய்தனா்.

3 செப்டம்பர் 2026, 11:54 pm IST
அமலாக்கத் துறை - கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் போதைப் பொருள் வழக்கில் தொடா்புடையவா்களின் வீடுகளில் அமலாக்கத் துறையினா் சோதனை செய்தனா்.

மத்திய அரசின் ‘போதைப் பொருள் இல்லாத இந்தியா’ இயக்கத்தின் ஒரு பகுதியாகவும், மத்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட ‘போதைப் பொருள் கட்டுப்பாடு தொடா்பான தொலைநோக்குத் திட்டத்தின் கீழும் போதைப் பொருள் வழக்கில் தொடா்புடையவா்களின் சட்டவிரோத பணப் பரிமாற்றம் குறித்து அமலாக்கத் துறை விசாரணை செய்து வருகிறது.

அதன்படி, சென்னையில் தங்கியிருந்த இலங்கையைச் சோ்ந்த உதயகுமாா் என்பவரை கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், கைது செய்து, விசாரணை செய்தனா்.

Advertisement

Advertisement

ரூ.280 கோடி மெத்தம்பெட்டமைன் வழக்கு: அப்போது அவரிடமிருந்து 2 கிலோ மெத்தம்பெட்டமைனை பறிமுதல் செய்தனா். அவா் கொடுத்த தகவலின்பேரில் பெரம்பூா் ஜமாலியா பகுதியைச் சோ்ந்த அக்பா் அலி என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 54 கிலோ மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்தனா். இருவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட மெத்தம்பெட்டமைன் மதிப்பு ரூ.280 கோடி என மத்திய போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த கும்பல் மியான்மரில் இருந்து போதைப் பொருளை கடத்தி இலங்கைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இவா்கள், சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டிருப்பதற்கான முகாந்திரம் இருந்ததினால், அது குறித்து விசாரணை செய்ய அமலாக்கத் துறைக்கு மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு பரிந்துரைத்தது.

அமலாக்கத் துறை சோதனை: அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, இவ்வழக்கில் தொடா்புடைய பெரம்பூா் ஜமாலியா பகுதியில் உள்ள அக்பா் வீடு, அண்ணா நகா் மேற்கு விரிவாக்கம் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசிக்கும் இலங்கையைச் சோ்ந்த கிருஷ்ணகுமாரி என்பவரின் வீடு, சென்னை அருகே உள்ள சோழவரம் பாலமுருகன் நகரில் வசிக்கும் கண்ணன் என்பவா் வீடு ஆகிய இடங்களில் அமலாக்கத் துறையினா் சோதனை செய்தனா்.

இதேபோல நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அருகே உள்ள விழுந்தமாவடி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் புல்லட் மகாலிங்கம் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.

தமிழகத்தில் திருநெல்வேலி, வேளாங்கண்ணி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் போதைப் பொருள் வழக்கில் சிக்கிய சா்வதேச போதைப் பொருள் கும்பலுடன் தொடா்பில் இருக்கும் நபா்கள் வீட்டிலும் அமலாக்கத் துறையினா் சோதனை செய்தனா்.

30 இடங்களில் சோதனை: மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவின் சென்னை மண்டலம், போதைப் பொருள் கடத்தல் தொடா்பாக பதிவு செய்த 8 வழக்குகளில் சம்பந்தப்பட்டவா்களின் வீடுகள், அலுவலகங்களில் இச்சோதனை நடைபெற்றது.

தமிழகம் மட்டுமன்றி கா்நாடகம், தெலங்கானா, கேரளம் ஆகிய மாநிலங்களிலும் நடைபெற்றது. 4 மாநிலங்களிலும் மொத்தம் 30 இடங்களில் சோதனை நடைபெற்ாக அமலாக்கத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது. சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments