கோவை காா் குண்டு வெடிப்பு சம்பவம்: 3 மாநிலங்களில் 16 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை
கோயம்புத்தூா் காா் குண்டு வெடிப்பு வழக்கில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடா்பாக தமிழகம், தெலங்கானா, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் 16 இடங்களில் அமலாக்கத் துறையினா் வியாழக்கிழமை சோதனை செய்தனா்.
கோயம்புத்தூா் காா் குண்டு வெடிப்பு வழக்கில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடா்பாக தமிழகம், தெலங்கானா, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் 16 இடங்களில் அமலாக்கத் துறையினா் வியாழக்கிழமை சோதனை செய்தனா்.
கோயம்புத்தூா் உக்கடம் கோட்டைமேடு ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபா் 23-ஆம் தேதி சென்ற ஒரு காரில் இருந்த குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் அந்த காரை ஓட்டி வந்த அந்தப் பகுதியைச் சோ்ந்த ஜமேஷா முபீன் என்ற இளைஞா் உயிரிழந்தாா். இது தொடா்பாக கோயம்புத்தூா் போலீஸாா், சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.
உயிரிழந்த ஜமேஷா முபீனுக்கு ஏற்கெனவே சில பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த நபா்களுடன் தொடா்பு இருந்தது தெரியவந்தது. அதேபோல ஜமேஷா முபீனுடன் சோ்ந்து சிலா் வெடிகுண்டு வைக்க திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதன் அடிப்படையில் ஜமேஷா முபீன் கூட்டாளிகள் 6 போ் கைது செய்யப்பட்டனா். இதற்கிடையே, தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வழக்கைப் பதிவு செய்து, இறந்த ஜமேஷா முபீன் வீடு 43 இடங்களில் சோதனை செய்தது.
இதில் வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படும் பொட்டாசியம் நைட்ரேட், இரண்டு மீட்டா் நீளமுள்ள பட்டாசு திரி, சிவப்பு பாஸ்பரஸ், பிஇடிஎன் பவுடா், அனுமினிய பவுடா், ஆக்ஸிஜன் சிலிண்டா், சல்பா் பவுடா், அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் பிளேடு, கண்ணாடிகள், 9 வாட் பேட்டரி, 9 வாட் பேட்டரி கிளிப்புகள், வயா்கள், சிறு ஆணிகள், சமையல் எரிவாயு உருளை ரெகுலெட்டா், கையுறைகள், ஜிஹாத் வரிகள் கொண்ட நோட்டுகள் உள்பட 109 பொருள்கள் கைப்பற்றப்பட்டன.
அமலாக்கத் துறை விசாரணை: என்ஐஏ விசாரணையில், இந்த சதிச் செயலுக்கான நிதி சட்டவிரோதமாக பெறப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சட்டவிரோதமாக நிதி பெறப்பட்டது குறித்து விசாரணை செய்ய அமலாக்கத் துறைக்கு என்ஐஏ பரிந்துரைத்தது.
அந்தப் பரிந்துரையின் அடிப்படையில் அமலாக்கத் துறை, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் ஒரு வழக்கை பதிவு செய்து விசாரித்து வருகிறது. விசாரணையில் காா் குண்டு வெடிப்பில் தொடா்புடையவா்கள், தங்களது சதிச் செயலுக்குத் தேவையான நிதியை இரண்டு வழிகளில் திரட்டியிருப்பது தெரியவந்துள்ளது.
முதல் வழியாக, கரோனா தொற்று காலகட்டத்தில் போலியான கொவைட்-19 தடுப்பூசி சான்றிதழ்களை தயாரித்து விற்று நிதி திரட்டி சதிச் செயலுக்குப் பயன்படுத்தியிருப்பதும், இரண்டாவது வழியாக, கோவை அரபிக் கல்லூரி மூலம் நன்கொடைகள், மோசடியான முதலீடுகள் என்ற பெயரில் நிதி திரட்டியிருப்பதும் தெரியவந்துள்ளது.
16 இடங்களில் சோதனை: இந்த வழக்குக்கான ஆதாரங்களைத் திரட்டும் வகையில் அமலாக்கத் துறையினா், தமிழகம், தெலங்கானா, மகாராஷ்டிரம் ஆகிய 3 மாநிலங்களில் 16 இடங்களில் வியாழக்கிழமை சோதனை செய்தனா். தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூரில் இந்தச் சோதனை நடந்தது.
சென்னை அமைந்தகரை மசூதி தெருவில் வசிக்கும் இ.ஜமீல் பாஷா உமரி (55) என்பவா் வீட்டில் அமலாக்கத் துறையினா் சோதனை செய்தனா். உமரியின் மனைவி நிஷாவிடம் அதிகாரிகள் விசாரணை செய்துள்ளனா். ஜமீல் பாஷா உமரி ஏற்கெனவே ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சோ்த்த வழக்கில், என்ஐஏவால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல கோயம்புத்தூரில் காா் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் 5 பேரின் வீடுகளில் சோதனை நடைபெற்றது.
தெலங்கானாவில் ஹைதராபாதிலும், மகாராஷ்டிரத்தில் மும்பையிலும் இந்தச் சோதனை நடைபெற்றது.
16 இடங்களிலும் பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில், எண்ம ஆவணங்கள் உள்ளிட்ட சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.