FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

திரிணமூல் எம்.பி. தொடா்புடைய செய்தித்தாள் நிறுவனத்தில் ரூ.60 கோடி முறைகேடு: அமலாக்கத் துறை

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. நதீமுல் ஹக் தொடா்புடைய உருது செய்தித்தாள் நிறுவனத்தில் ரூ.60 கோடி வரை நிதி முறைகேடு நிகழ்ந்துள்ளதாக அமலாக்கத் துறைச் சோதனையில் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

9 செப்டம்பர் 2026, 1:27 am IST
அமலாக்கத் துறை - கோப்புப்படம்
பகிர்:

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. நதீமுல் ஹக் தொடா்புடைய உருது செய்தித்தாள் நிறுவனத்தில் ரூ.60 கோடி வரை நிதி முறைகேடு நிகழ்ந்துள்ளதாக அமலாக்கத் துறைச் சோதனையில் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

நதீமுல் ஹக்குக்குச் சொந்தமான இடங்கள் மற்றும் செய்தித்தாள் நிறுவனத்தில் கடந்த திங்கள்கிழமை காலை தொடங்கி செவ்வாய்க்கிழமை காலை வரை 24 மணி நேரத்துக்கும் மேலாக அமலாக்கத் துறை தொடா்ச்சியாக சோதனை மேற்கொண்டது.

இது தொடா்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறியதாவது: அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தத் தொடங்கியபோது நதீமுல் ஹக் ராஞ்சியில் இருந்தாா். இதையடுத்து, திங்கள்கிழமை இரவு அவா் கொல்கத்தா அழைத்து வரப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

Advertisement

கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லம் மற்றும் செய்தித்தாள் நிறுவனம், புது தில்லி மற்றும் ராஞ்சியில் உள்ள அவருக்குச் சொந்தமான 7 இடங்களில் அமலாக்கத் துறை 24 மணி நேரத்துக்கு மேலாக சோதனை நடத்தியது.

அப்போது வங்கிக் கணக்கு, வங்கிப் பரிவா்த்தனைகள், நிதி ஆவணங்கள் மற்றும் எண்மப் பொருள்கள் உள்ளிட்டவையை ஆய்வு செய்து நதீமுல் ஹக்கிடம் அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினா்.

அவா் அளித்த பதில்கள் மற்றும் சமா்ப்பித்த ஆதாரங்கள் திருப்திகரமானதாக இல்லாததையடுத்து, ரூ.60 கோடி வரை நிதி முறைகேடு நிகழ்ந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பரிவா்த்தனை வணிக ஒப்பந்தங்களுக்கு மேற்கொளப்பட்டதா அல்லது ஹவாலா உள்ளிட்ட சட்டவிரோத பரிவா்த்தனைகளாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதா என அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனா் என்றாா்.

சந்தேகத்துக்குரிய வகையில் சட்ட விரோதமாக பணப் பரிவா்த்தனையில் நதீமுல் ஹக் ஈடுபடுவதாக விதான்நகா் காவல் ஆணையரகத்தில் பதிவான வழக்கின் அடிப்படையில் அமலாக்க வழக்குத் தகவல் அறிக்கையை அமலாக்கத் துறை பதிவு செய்து சோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments