FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சர்வக்ஞர் நூலகக் கட்டடத்துக்கு நிதி அளித்த கருணாநிதி

பெங்களூரு தமிழ்ச் சங்கத்தில் சர்வக்ஞர் நூலகக் கட்டடம் அமைய தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி நிதி அளித்து உதவியுள்ளார்.

30 ஜனவரி 2024, 9:57 pm IST
பகிர்:

பெங்களூரு தமிழ்ச் சங்கத்தில் சர்வக்ஞர் நூலகக் கட்டடம் அமைய தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி நிதி அளித்து உதவியுள்ளார்.
பெங்களூருவாழ் தமிழர்களின் அறிவுதாகத்தைத் தீர்த்து வைப்பதற்காக பெங்களூரு தமிழ்ச் சங்கத்தில் கன்னட கவிஞர் சர்வக்ஞரின் பெயரில் ஏற்படுத்தப்பட்ட நூலகத்தின் அடிக்கல் நாட்டு விழாவுக்கு அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி அழைக்கப்பட்டிருந்தார். 1974-ஆம் ஆண்டு மே 27-ஆம் தேதி நடைபெற்ற விழாவில் கருணாநிதி பங்கேற்று பேசும் போது, கட்டடம் கட்டுவதற்கு நிதி உதவி செய்வதாக உறுதி அளித்தார். 
அதை நினைவுகூர்ந்து அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவைத் தலைவரும், பெங்களூரு தமிழ்ச் சங்க முன்னாள் தலைவருமான மு.மீனாட்சி சுந்தரம் கூறுகையில்,"பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் 2-ஆவது மாடியில் நூலகம் கட்டுவதற்கு அப்போதைய சங்கத் தலைவர் புலவர் க.சுப்ரமணியனார் முயற்சி மேற்கொண்டு, அதற்கு அடிக்கல் நாட்டுவதற்கு அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியை அழைத்திருந்தார். அவரும் நிகழ்ச்சியில் மகிழ்ச்சிப் பொங்க கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். 
அப்போது நிகழ்ச்சியில் பேசிய க.சுப்ரமணியனார், நிதிப்பற்றாக்குறையினால் கட்டடப் பணி தடைபடும் சூழலை விளக்கினார். இந்த கட்டடத்தை கட்டிமுடிக்க நிதி உதவிஅளிக்குமாறு கருணாநிதியை கேட்டுக் கொண்டார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய கருணாநிதி,"ஜூன் மாதம் 3-ஆம் நாளில் எனது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அப்போது எனது கட்சியின் தொண்டர்களிடம் இருந்து திரட்டப்படவிருக்கும் ஊனமுற்றோர் மறுவாழ்வளிப்பு நன்கொடையில் இருந்து பெங்களூரு தமிழ்ச்சங்கத்திற்கு நூலகக்கட்டட நிதி அளிப்பதாக உறுதியளிக்கிறேன்' என்று கூறியிருந்தார். 
அதன்படியே தம் பிறந்த நாளில் திரட்டப்பட்ட நன்கொடையில் இருந்து தமிழ்ச் சங்கத்துக்கு ரூ.50 ஆயிரம் நன்கொடையாக அளித்தார். கருணாநிதி தந்த நன்கொடையால் கட்டடப் பணியை முடித்திட உதவியது.
அவருக்கு நன்றி கூறும் வகையில், அந்த மாடிப் பகுதிக்கு தமிழ்க் காவலர் கருணாநிதி கூடம் எனப் பெயரிடப்பட்டது. தமிழ்க் காவலர் என்னும் பட்டம் தமிழ்ச் சங்கத்தால் வழங்கப்பட்டது.
பெங்களூரு தமிழ்ச் சங்கத்துக்கும், கருணாநிதிக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது. தமிழ்மொழி, தமிழர் நலனுக்காக அல்லும் பகலும் உழைத்த கருணாநிதி, கர்நாடகத் தமிழர் மீது அளவிலா அன்பு கொண்டிருந்தார். அதன்விளைவாகவே, கர்நாடகத்துக்கு அடிக்கடி வந்திருக்கிறார். கர்நாடகத்தில் நடக்கும் திமுக கூட்டங்களில் கலந்து கொள்ள வரும்போது பெங்களூரு தமிழ்ச் சங்கம் நடத்தும் இலக்கியக்கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றுவது வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். 
பெங்களூரு தமிழ்ச் சங்கத்துக்கு ஆற்றிய உதவியை நினைவுக்கூரும் வகையில் கருணாநிதியின் உருவப்படத்தை பல ஆண்டுகளுக்கு முன்பே நூலகத்தில் வைத்திருக்கிறோம். காமராஜர், பக்தவத்சலம், அண்ணாவின் வழியில் கருணாநிதியும் பெங்களூரு தமிழ்ச் சங்கத்தை பெரிதும் நேசித்தார், பல வகைகளில் உதவியும் புரிந்தார். 
பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் வரலாற்றில் கருணாநிதியின் பங்களிப்பு பொன்னெழுத்துகளில் நிரந்தரமாக பொறிக்கப்பட்டிருக்கும்' என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments