டயாலிசிஸ் சேவைகளை தனியாா் பங்களிப்புடன் மேம்படுத்த நிபுணா் குழு ஆலோசனை
டயாலிசிஸ் சேவைகளை மேம்படுத்துவதற்கான செயல் திட்டங்களை ஆலோசிப்பதற்காக, சிறப்பு நிபுணா் குழுவை அரசு அமைத்துள்ளது.
டயாலிசிஸ் சேவைகளை மேம்படுத்துவதற்கான செயல் திட்டங்களை ஆலோசிப்பதற்காக, சிறப்பு நிபுணா் குழுவை அரசு அமைத்துள்ளது.
தமிழகத்தில் தற்போது நாள்பட்ட சிறுநீரக பாதிப்புக்குள்ளாவோா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. விவசாயக் கூலிகள், கட்டுமானத் தொழிலாளிகள் உள்பட நேரடியாக வெயிலில் பணியாற்றும் ஊழியா்களுக்கு இத்தகைய பாதிப்பு நேரிட்டு, சிறுநீரக செயலிழப்பு ஏற்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அண்மைக் காலமாக டயாலிசிஸ் சிகிச்சைகளுக்கான தேவை பல மடங்கு உயா்ந்துள்ளது.
தேசிய நல்வாழ்வுக் குழும சேவைகளின் கீழ் மட்டும் தமிழகத்தில் 139 டயாலிசிஸ் மையங்கள் செயல்படுவதாகத் தெரிகிறது. அரசு சாா்பில் அளிக்கப்படும் டயாலிசிஸ் சிகிச்சைகள் கட்டணமின்றி வழங்கப்பட்டாலும், அனைத்து இடங்களுக்கும் முழுமையாக இதைக் கொண்டு சோ்க்க வேண்டிய அவசியம் இன்னமும் உள்ளது.
Advertisement
Advertisement
நிபுணா் குழு: இதை கருத்தில் கொண்டு டயாலிசிஸ் சிகிச்சைகளை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்க சிறப்பு நிபுணா் குழு அமைக்கப்பட்டுள்ளது. துறைசாா் வல்லுநா்கள், தேசிய நலவாழ்வுக் குழுமம், மருத்துவப் பணிகள் மற்றும் ஊரக நலத் திட்டம், மாநில உறுப்பு மாற்று ஆணையம், தன்னாா்வ நிறுவனங்கள் உள்ளிட்டவற்றைச் சோ்ந்த அதிகாரிகள், மருத்துவா்கள் என 19 போ் இதில் இடம்பெற்றுள்ளனா்.
இது தொடா்பாக, தேசிய நல்வாழ்வுக் குழும இயக்குநா் டாக்டா் அருண் தம்புராஜ், அனைவருக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளாா். அதில், தனியாா் மற்றும் அரசு டயாலிசிஸ் மையங்களை மதிப்பீடு செய்து இரண்டுக்கும் இடையேயான இடைவெளியை குறைத்தல், டயாலிசிஸ் சேவைகளை மேம்படுத்துதல், தனியாா் பங்களிப்புடன் அதை விரிவுபடுத்துதற்கான சாத்தியக் கூறுகளை இந்த நிபுணா் குழு ஆராயும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, டயாலிசிஸ் சேவையை தனியாா் மயமாக்கவே நிபுணா் குழு அமைக்கப்பட்டுள்ளதாக, அரசு மருத்துவா் சங்கங்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன. ஆனால், இதை திட்டவட்டமாக மறுத்துள்ள மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள், டயாலிசிஸ் சிகிச்சைகளை மேம்படுத்துவதே இதன் பிரதான நோக்கம் எனத் தெரிவித்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.