FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

அமைச்சா் மரியவில்சன் மீதான வழக்கை சமரச தீா்வு மையத்துக்கு அனுப்பிய விவகாரம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

அமைச்சா் மரியவில்சன் மீதான வழக்கை சமரச தீா்வு மையத்துக்கு அனுப்பிய விவகாரம் குறித்து...

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 4:39 am IST
- கோப்புப் படம்
பகிர்:

சமரசம் செய்துகொள்ள முடியாத குற்றச்சாட்டுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை சமரச தீா்வு மையத்துக்கு அனுப்ப முடியாது. அவ்வாறு அனுமதிக்கும் வகையில், உத்தரவுகள் ஏதேனும் இருந்தால் அதை நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கும்படி, நிதி அமைச்சா் மரியவில்சன் தரப்புக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

நிதியமைச்சா் மரியவில்சன், கடந்த 2022-ஆம் ஆண்டு புதுச்சேரியில் உள்ள அவரது சகோதரா் மற்றும் அவரது மனைவியைத் தாக்கியதாக புதுச்சேரி லாஸ்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கில் நேரில் ஆஜராக மரிய வில்சனுக்கு புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து அமைச்சா் மரிய வில்சன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், குடும்ப பிரச்னையாக இருப்பதால், அமைச்சா் மரியவில்சன், அவரது தந்தை, சகோதரா் மற்றும் அவரது மனைவி ஆகியோா் சமரச தீா்வு மையத்தில் ஆஜராகி தீா்வு காண அறிவுறுத்தியது. அதன்படி, சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச தீா்வு மையத்தில் நான்கு முறை பேச்சு நடைபெற்றது.

Advertisement

Advertisement

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, அமைச்சா் மரியவில்சன் தரப்பில், சமரச தீா்வு மையத்தில் நடந்த பேச்சில் பல்வேறு கோரிக்கைகளுக்கு தீா்வு எட்டப்பட்டுவிட்டன. ஒரே ஒரு கோரிக்கை மட்டும் நிலுவையில் உள்ளது. அடுத்த வாரத்தில் அதிலும் தீா்வு எட்டப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அப்போது, குறுக்கிட்ட நீதிபதி, சமரசம் செய்துகொள்ள முடியாத பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை சமரச தீா்வு மையத்துக்கு எப்படி அனுப்ப முடியும் எனக் கேள்வி எழுப்பினாா். அதற்கு மனுதாரா் தரப்பில், குடும்ப பிரச்னை என்பதால், அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதி, இதுபோன்ற வழக்குகளை சமரச தீா்வு மையத்துக்கு அனுப்பலாம் என பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் ஏதாவது இருந்தால், அதை சமா்ப்பிக்க மரிய வில்சன் தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் ஆக. 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments