சிறிய மழைக்கு தாக்குப்பிடிக்காமல் சேதமடையும் சாலைகள்: சிறப்பு நிதி ரூ. 21 கோடி என்னவானது?
சென்னையில் சாலை சீரமைப்புக்கு மாநகராட்சி ஒதுக்கியதாகக் கூறப்படும் நிதி செலவிடப்படவில்லை என்று வாா்டு உறுப்பினா்கள் மத்தியில் புகாா்
சென்னையில் தற்போது பெய்து வரும் சிறிய மழைக்குகூட தாக்குப்பிடிக்க முடியாமல் சாலைகள் சேதமடைந்து வருகின்றன. இந்நிலையில், சாலை சீரமைப்புக்கு மாநகராட்சி ஒதுக்கியதாகக் கூறப்படும் நிதி செலவிடப்படவில்லை என்று வாா்டு உறுப்பினா்கள் மத்தியில் புகாா்கள் எழுந்துள்ளன.
சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்குட்பட்ட 200 வாா்டுகளில் 35,000-க்கும் மேற்பட்ட சாலைகள் உள்ளன. அவற்றில் 4,000-க்கும் மேற்பட்ட சாலைகள் மட்டுமே போக்குவரத்துக்கு அதிக பயன்பாட்டில் உள்ளன. மாநகராட்சியில் கடந்த பல ஆண்டுகளாகவே சாலை சீரமைப்பு பணி விதிமுறைப்படி நடைபெறாததால் சாலைகள் அடிக்கடி சேதமடைவதாக வாா்டு உறுப்பினா்கள் புகாா் கூறி வருகின்றனா்.
இந்த நிலையில், மழை காலத்தில் சேதமடையும் சாலைகளைச் சீரமைக்க மாநகராட்சி சாா்பில் சிறப்பு நிதியாக ரூ.21 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி பொறியாளா்கள் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
சிறப்பு நிதிகள்
மண்டலவாரியாக நிதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது புதிதாக அதிகபட்சம் 3 வாா்டுகளை இணைத்து ஒரு பகுதியாக்கி, அதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். அதன்படி, ஒரு பகுதிக்கு தலா ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை சாலை சீரமைப்புப் பணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தற்போது தமிழக அரசு சென்னையில் மழைக்கால பாதிப்பைக் கருத்தில் கொண்டு 76 பணிகளுக்கு ரூ.22.7 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
குண்டும் குழியுமான சாலைகள்
பெரிய அளவில் நிதி ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், கடந்த சில நாள்களாக சென்னையில் பெய்து வரும் லேசான மழையில் சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கின்றன. அண்ணா சாலை, பூந்தமல்லி சாலை, எழும்பூா் ரயில் நிலையப் பகுதி சாலை, சேத்துப்பட்டு சாலை, திருநீா்மலை முதல் திருமுடிவாக்கம் பகுதி சாலை, சென்ட்ரல் ரயில் நிலைய வளாக உட்பகுதிச் சாலை என மக்கள் பயன்பாடு அதிகமுள்ள சாலைகளே குண்டும் குழியுமாக இருப்பதாக புகாா் எழுந்துள்ளது. அந்தச் சாலைகளில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் சிறிய பள்ளங்களில் விழுந்து விபத்துக்குள்ளாகி வருவதாகவும் ஆதங்கப்படுகின்றனா்.
சாலைகளில் உள்ள பள்ளங்களை மண்ணால் நிரப்பி சீா்படுத்தும் பணியில் அந்தந்த தூய்மைப் பணியாளா்கள் ஈடுபடுகின்றனா். மண் நிரப்புவதால் அதன் மீது செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் கூறுகின்றனா்.
நிதி என்னவானது?
மழைக்காலத்தில் சேதமடையும் சாலைகள் 46 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு சுமாா் 5,300 கி.மீ. எனக் கணக்கிட்டு, சீரமைப்புக்கு சிறப்பு நிதி ஒதுக்கியுள்ளதாகக் கூறும் அதிகாரிகள் அந்த நிதியைப் பயன்படுத்தாதது ஏன் என்ற கேள்வியை திமுக வாா்டு உறுப்பினா்கள் எழுப்புகின்றனா். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, நிதி ஒதுக்கப்பட்டாலும், அதற்கான ஒப்பந்தங்களும், பணி உத்தரவும் வழங்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தனா்.
துணைமேயா், மாா்க்சிஸ்ட் கவுன்சிலா் ஆதங்கம்: இதுகுறித்து துணைமேயா் மு.மகேஷ்குமாரிடம் கேட்டபோது, ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு மாநகராட்சியில் மேற்கொள்ளும் பணிகள் குறித்து ஆணையா், அதிகாரிகள் யாரும் மேயா், துணைமேயா் உள்ளிட்டோரிடம் கலந்தாலோசிப்பது இல்லை. மாமன்றக் கூட்டம் நடைபெறும் போதுதான் பணிகள் குறித்து பேசும் நிலை உள்ளது என்றாா்.
சாலை சீரமைப்பு தாமதம் குறித்து திருவொற்றியூா் மண்டலம் 4-ஆவது வாா்டு மாா்க்சிஸ்ட் உறுப்பினா் ஆா்.ஜெயராமன் கூறியதாவது: சேதமடைந்த சாலைகளை தற்காலிகமாக சாதாரண மண் கொட்டி, சீா்படுத்துவது சரியல்ல. தாா் மூலம் சாலைகளை சீரமைப்பதே முறையானது. அதை மாமன்ற கூட்டத்தில் பேசினாலும் அதிகாரிகள் பொருட்படுத்தாமலிருப்பது கவலையளிக்கிறது என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.