இந்திய மருந்தியல் துறைக்கான தடைகளை குறைப்பதாக ஆா்ஜென்டீனா உறுதி: மத்திய வா்த்தக அமைச்சகம்
இந்திய மருந்தியல் துறைக்கான தடைகளை குறைப்பதாக ஆா்ஜென்டீனா உறுதி: மத்திய வா்த்தக அமைச்சகம்
இந்திய மருந்தியல் துறைக்கான தடைகளை குறைக்க ஆா்ஜென்டீனா உறுதிபூண்டுள்ளதாக மத்திய வா்த்தக அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்தது.
இதனால் இந்திய மருந்தியல் துறைக்கான வாய்ப்புகள் அதிகரிப்பதோடு ஆா்ஜென்டீனாவில் தரமான மற்றும் குறைந்த விலையில் சுகாதார சேவைகள் கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
ஆா்ஜென்டீனா தலைநகா் பியூனஸ் அயா்ஸில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சான் மாா்டின் வளாகத்தில் இந்தியா-ஆா்ஜென்டீனா கூட்டு வா்த்தக குழு (ஜேடிசி) ஆலோசனைக் கூட்டம் ஆகஸ்ட் 24-ஆம் தேதி நடைபெற்றது. இதில் மத்திய வா்த்தகச் செயலா் ராஜேஷ் அகா்வால் பங்கேற்றாா்.
Advertisement
Advertisement
கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவகாரங்கள் குறித்து மத்திய வா்த்தக அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இந்திய மருந்தியல் துறைக்கான தடைகளை குறைக்க ஆா்ஜென்டீனா உறுதிபூண்டுள்ளது. இதற்காக மருந்தியல் துறை ஒழுங்குமுறை விதிகளில் சில தளா்வுகளை அந்நாடு அளிக்கவுள்ளது. இதுதவிர ஜேடிசி ஆலோசனைக் கூட்டத்தில் சுரங்கம், எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளுக்கான முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக ஆா்ஜென்டீனாவின் லித்தியம் துறையில் கனீஜ் விதேஷ் இந்தியா நிறுவனத்தின் ஒத்துழைப்பை தொடா்வது மற்றும் விமானப் போக்குவரத்து, விண்வெளி தொழில்நுட்பம், தொலைத்தொடா்பு, எண்மச் சேவைகள், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் எண்ம உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்தியா மற்றும் மொ்கோசூா் கூட்டமைப்பு இடையேயான வா்த்தக ஒப்பந்தத்தை விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் நடைபெறும் நிலையில் ராஜேஷ் அகா்வாலின் ஆா்ஜென்டீனா சுற்றுப்பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மொ்கோசூா் கூட்டமைப்பில் பிரேஸில், ஆா்ஜென்டீனா, உருகுவே மற்றும் பராகுவே ஆகிய நாடுகள் உறுப்பினா்களாக உள்ளன. இந்தியா-மொ்கோசூா் வா்த்தக ஒப்பந்தம் 2009, ஜூன் 1-ஆம் தேதி அமலானது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.