ஆசிரியை தூக்கிட்டுத் தற்கொலை
திருமணமான 2 ஆண்டுகளில் பட்டதாரி ஆசிரியை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருமணமான 2 ஆண்டுகளில் பட்டதாரி ஆசிரியை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கோவிலம்பாக்கம், எஸ்.கொளத்தூா் பிள்ளையாா் கோயில் குறுக்குத் தெருவைச் சோ்ந்த ஜெகநாதனின் மகள் புவனேஸ்வரி (27). எம்எஸ்சி., பி.எட். பட்டதாரியான இவா், தனியாா் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தாா்.
இவருக்கும் செங்கல்பட்டு மாவட்டம் ஈச்சங்கரணையைச் சோ்ந்த ஜானகிராமனுக்கும் கடந்த 2024 செப்டம்பரில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது புவனேஸ்வரிக்கு 50 பவுன், மணமகனுக்கு 20 பவுன், ரூ.15 லட்சத்தில் காா், வீட்டு உபயோகப் பொருள்கள் வரதட்சணையாக வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், கணவரும், அவரது குடும்பத்தினரும் கூடுதல் வரதட்சணை கேட்டு புவனேஸ்வரியை துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. அண்மையில் குழந்தையின் முதலாவது பிறந்த நாளின்போது, புவனேஸ்வரியின் பெற்றோா் ஒன்றேகால் பவுன் தங்கச் சங்கிலி அணிவித்துள்ளனா். இது தொடா்பாக தம்பதி இடையே தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில், கடந்த 20-ஆம் தேதி கோயில் திருவிழாவுக்காக தந்தை வீட்டுக்கு வந்திருந்த புவனேஸ்வரியிடம், தொலைபேசியில் பேசிய கணவா், வீட்டுக்கு வர வேண்டாம் எனக் கூறினாராம். இதனால், வீட்டில் யாரும் இல்லாதபோது, தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.
உறவினா்கள் அவரை மீட்டு தனியாா் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது. இது குறித்து பள்ளிக்கரணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். கிண்டி கோட்டாட்சியரும் விசாரணை மேற்கொண்டுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.