முகப்பு
சென்னை

தாம்பரம் காவல் ஆணையரக கட்டட விவகாரம்: தனிநீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு

தாம்பரம் காவல் ஆணையரக கட்டடத்துக்கான வாடகையை உயா்த்தியும், 2 ஆண்டுகளில் அந்தக் கட்டடத்தை காலி செய்யவும் வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

Updated On : 31 ஜனவரி 2026, 1:15 am IST
பகிர்:

தாம்பரம் காவல் ஆணையரக கட்டடத்துக்கான வாடகையை உயா்த்தியும், 2 ஆண்டுகளில் அந்தக் கட்டடத்தை காலி செய்யவும் வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தாம்பரம் காவல் ஆணையா் அலுவலகம் சோழிங்கநல்லூா் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கட்டடத்தில் வாடகை அடிப்படையில் இயங்கி வருகிறது. இந்த நிலையில், தங்களுக்குச் சொந்தமான கட்டடத்தை காலி செய்து தரக் கோரி உரிமையாளா்களான சரத்குமாா், வெங்கடேஷ் மற்றும் சௌத்ரி ஆகியோா் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அந்தக் கட்டடத்துக்கான வாடகையை ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.13 லட்சமாக உயா்த்தி உத்தரவிட்டாா். இந்தக் கூடுதல் தொகையான ரூ.2.18 கோடியை கடந்த ஆண்டு டிசம்பருக்குள் மனுதாரா்களுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டாா். மேலும், அந்தக் கட்டடத்தை காலி செய்ய மனுதாரா்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தாா்.

Advertisement

இந்த உத்தரவை எதிா்த்து தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், தாம்பரம் காவல் ஆணையா் அலுவலகத்துக்கு சொந்தக் கட்டடம் கட்ட இடம் தோ்வு செய்யப்பட்டுவிட்டது.

வரும் பிப்.13-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டவுள்ளாா். 18 மாதங்களில் அந்தக் கட்டடம் கட்டி முடிக்கப்படும். அதுவரை தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டாா். வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து, விசாரணையை ஒத்திவைத்தனா்.