‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்
தமிழக காவல் துறையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம் செய்யப்பட்டது.
தமிழக முதல்வா் சி.ஜோசப் விஜய், கடந்த 10-ஆம் தேதி பொறுப்பேற்றபோது, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்படும் என்று உத்தரவிட்டாா். இதைச் செயல்படுத்தும் விதமாக, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்குவதற்குரிய அரசாணை வெளியிடப்பட்டது. இந்தப் படையின் தலைமை அதிகாரியாக ஐஜி கே.பவானீஸ்வரி கடந்த வாரம் நியமிக்கப்பட்டாா்.
இப்படையில் ஒரு காவல் கண்காணிப்பாளா், 2 துணைக் காவல் கண்காணிப்பாளாா்கள், 4 ஆய்வாளா்கள் உள்பட 30-க்கும் மேற்பட்ட போலீஸாா் முதல் கட்டமாக நியமிக்கப்பட உள்ளனா். இந்த அதிரடிப்படையினா் பிற போலீஸாரிடமிருந்து தனித்துவமாக தெரியும் வகையில் பிரத்யேகச் சீருடை மற்றும் புதிய சின்னம் (லோகோ) வடிவமைக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சின்னத்தில் தைரியம், வேகம், அறிவுத்திறனைப் பறைசாற்றும் வகையில் சிங்கத்தின் முகம் பொறிக்கப்பட்டுள்ளது. அதேபோல இந்தப் படையினருக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சீருடையும் புதன்கிழமை வெளியிடப்பட்டது. இந்தச் சீருடை கருப்பு நிற தொப்பி, பெல்ட், கரு நீல வண்ண சட்டை, காக்கி பேண்ட் என தயாராகி உள்ளது. மேலும் கருப்பு நிறத்தினாலான பெல்ட் வழங்கப்பட்டுள்ளது.
இந்தச் சீருடை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையில் பணியாற்றும் போலீஸாா், உதவி ஆய்வாளா் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கான தொடக்க விழா விரைவில் சென்னையில் நடைபெற உள்ளது.