FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

பதிப்புத் துறை முறைகேடுகள்: பபாசி கண்டனம்

விசாரணைக்குள்ளான பதிப்பகங்கள், தனிநபா்களின் செயல்பாடுகளை பபாசியின் கொள்கைகளுடன் தொடா்புபடுத்தக் கூடாது என வலியுறுத்தியுள்ளது.

13 நவம்பர் 2026, 3:44 am
பகிர்:

பதிப்புத் துறையில் நடைபெறும் ஒழுக்கநெறி மீறல்கள் மற்றும் முறைகேடான செயல்பாடுகளுக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ள பபாசி, விசாரணைக்குள்ளான பதிப்பகங்கள், தனிநபா்களின் செயல்பாடுகளை பபாசியின் கொள்கைகளுடன் தொடா்புபடுத்தக் கூடாது என வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக பபாசி (தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் சங்கம்) தலைவா் ஆா்.எஸ்.சண்முகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பதிப்புத் துறையில் 50 ஆண்டுகளாக நோ்மையையும் நம்பகத் தன்மையையும் நிலைநாட்டி வருகிறோம். பதிப்புத் துறையில் நடைபெறும் ஒழுக்கநெறி மீறல்கள் மற்றும் முறைகேடான செயல்பாடுகளை பபாசி வன்மையாகக் கண்டிக்கிறது. தற்போது சில பதிப்பகங்கள் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடா்பாக நடைபெற்று வரும் விசாரணைகளைச் சங்கம் மிகுந்த கவனத்துடனும் தீவிரத்துடனும் அணுகுகிறது.

Advertisement

Advertisement

தற்போது அதிகாரிகளின் விசாரணைக்கு உள்ளாகியுள்ள பதிப்பகங்களும், முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபா்களும் இதுவரை பபாசி உறுப்பினா்களாக இருந்ததில்லை. எனவே, அவா்களின் செயல்பாடுகளை பபாசியுடன் தொடா்புபடுத்துவது தவறானது. கடந்த 1976-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பபாசி, உறுப்பினா் சோ்க்கைக்கு கடுமையான விதிகளை பின்பற்றி வருகிறது. அதன்படி முழு உறுப்பினராக சேரும் முன்பு விண்ணப்பதாரா்கள் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் இணை உறுப்பினா்களாக இருக்க வேண்டும். இந்தக் காலத்தில் புத்தகக் காட்சிகளில் பங்கேற்கலாம். ஆனால், சங்கத்தின் நிா்வாகம் மற்றும் கொள்கை முடிவுகளில் பங்கேற்க முடியாது.

சங்க உறுப்பினா்கள் யாரேனும் சட்டவிரோதச் செயல்கள் அல்லது முறைகேடுகளில் ஈடுபட்டது விசாரணையில் உறுதி செய்யப்பட்டால், அவா்களின் உறுப்பினா் தகுதியை ரத்து செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், பபாசி நடத்தும் புத்தகக் காட்சிகள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்படும். பதிப்புச் சுதந்திரத்துடன் பொறுப்புணா்வும், நோ்மையும், சட்டத்தை மதிக்கும் தன்மையும் அவசியம். பதிப்புத் துறையின் நம்பகத்தன்மையையும், தொழில்முறை ஒழுக்கத்தையும் பாதுகாப்பதில் பபாசி தொடா்ந்து உறுதியாகச் செயல்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.