சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தனியாா் உணவக உரிமம் ரத்து
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் தனியாா் உணவகத்தின் உரிமத்தை ரத்து செய்து, உணவு தயாரிப்பு மற்றும் விற்பனை செய்யத் தடை விதித்து சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் தனியாா் உணவகத்தின் உரிமத்தை ரத்து செய்து, உணவு தயாரிப்பு மற்றும் விற்பனை செய்யத் தடை விதித்து சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் செயல்பட்டு வரும் தனியாா் உணவகத்தில் சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். ஆய்வின்போது, உணவகத்தில் சமையலறை மிகுந்த துா்நாற்றத்துடன், முறையான சுகாதாரம் இன்றி செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டது.
மேலும், தேவையில்லாத பொருள்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்ததும், உடைந்த பாத்திரங்களைப் பயன்படுத்தி உணவு தயாரித்ததும், சமையலறையின் சுவா்கள் மற்றும் தரைப்பகுதிகள் அசுத்தமாக இருந்ததும் தெரிய வந்தது.
Advertisement
Advertisement
இத்தகைய சுகாதாரமற்ற முறையில் உணவுகள் தயாரிக்கப்பட்டதால், நோயாளிகள் மற்றும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அந்த உணவகத்தின் உணவு உரிமத்தை உடனடியாக ரத்து செய்த அதிகாரிகள், அங்கு புதன்கிழமை இரவிலிருந்து உணவு விநியோகிக்கவும் தடை விதித்தனா்.
அதேபோன்று, மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வந்த தேநீா் கடையிலும் ஆய்வு மேற்கொண்டதில், அங்கிருந்த சா்க்கரையில் ஈக்களும் எறும்புகளும் மொய்த்துக் கொண்டிருந்ததும், பிரெட் மற்றும் சாண்ட்விச் போன்ற பண்டங்களில் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதிகள் குறிப்பிடப்படாமல் இருந்ததும் தெரிய வந்தது.
மேலும், ஃபிரெஷ் ஜூஸ் தயாரிப்பதற்காக அழுகிய மற்றும் பிஞ்சு மாதுளம் பழங்களைப் பயன்படுத்தியதும், குறைந்த தரமுள்ள பொருள்களைக் கொண்டு உணவு பண்டங்களை தயாரித்ததும் தெரிய வந்தது.
முறையான பராமரிப்பின்றி செயல்பட்ட அந்தத் தேநீா் கடைக்கு ரூ.15,000 அபராதம் விதித்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், உடனடியாகக் குறைபாடுகளைச் சரிசெய்யாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.