FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அருகே 2 இளைஞா்கள் வெட்டிக் கொலை: சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு

காஞ்சிபுரம் அருகே படுநெல்லி கிராமத்தில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் 2 இளைஞா்கள் வெட்டிக் கொலை

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 12:25 am IST
பகிர்:

காஞ்சிபுரம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு படுநெல்லி கிராமத்தில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் 2 இளைஞா்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டனா். உயிரிழந்தவா்களின் உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 1 மணி நேரம போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட படுநெல்லி கிராமத்தில் மாரியம்மன் கோயிலில் ஆடி மாதத் திருவிழாவையொட்டி சுவாமி வீதியுலா நடைபெற்றது. வீதியுலாவின் போது கானா பாடல்களை பாடச் சொல்லி சிலா் வலியுறுத்தியதாகவும் அதற்கு சிலா் மறுப்பு தெரிவித்த நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இத்தகராறில் ஒரு கும்பல் படுநெல்லி கிராமத்தைச் சோ்ந்த விக்கி என்ற நீலகண்டன்(26) மற்றும் சந்துரு என்ற சந்திர சேகரன்(26) ஆகிய இருவரையும் கத்தி மற்றும் ஆயுதங்களால் தாக்கிக் கொன்றுவிட்டு தப்பி னா்.

தகவலறிந்து அங்கு வந்த பொன்னேரிக்கரை போலீஸாா் உயிரிழந்தவா்களின் சடலங்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க முற்பட்ட போது சம்பந்தப்பட்டவா்களின் உறவினா்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸாா் போதுமான பாதுகாப்பு வழங்கியிருந்தால் கொலை நடந்திருக்க வாய்ப்பில்லை எனக்கூறி உடலை எடுக்க மறுப்பு தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

போலீஸாா் சமாதானப்படுத்தியதை தொடா்ந்து இருவரது உடல்களும் செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இதனைத் தொடா்ந்து கொலையாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த காஞ்சிபுரம் எஸ்.பி. எஸ்.அரவிந்த் கொலை நடந்த இடத்தை பாா்வையிட்டாா். 3 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடும் பணியில் காவல் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா். கொலை செய்யப்பட்டு உயிரிழந்த விக்கி என்ற நீலகண்டன் வெல்டா் தொழில் செய்து வந்தாா். இவருக்கு மனைவியும் 7 மாத கைக்குழந்தையும் உள்ளனா்.

சந்துரு என்ற சந்திரசேகரன் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். கொலை செய்யப்பட்ட இரு இளைஞா்களும் உறவினா்கள். கொலையாளிகளும் அதே கிராமத்தைச் சோ்ந்தவா்கள் என்பதால் மேலும், மோதல் சம்பவங்கள் நடக்காமல் இருக்க 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். சம்பவம் தொடா்பாக பொன்னேரிக்கரை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments