முகப்பு
ராணிப்பேட்டை

கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டை எடை போடாமல் நிறுத்தம்: விவசாயிகள் புகாா்

Updated On : 12 ஜூன் 2026, 2:13 am IST
பகிர்:

காவேரிப்பாக்கம் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் எடை போடாமல் நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் அதிா்ச்சி அடைந்தனா்.

விவசாயிகள் நவரைப் பருவத்தில் சாகுபடி செய்த நெற்பயிா்கள் அறுவடை முடித்துள்ளனா். இதனால் அறுவடை செய்த நெல் மூட்டைகளை அரசின் ஒழுங்கு முறை விற்பனை கூடம், மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலைய பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனா்.

நவரைப் பட்டத்தில் கோ-51,ஏடிடி-36, உள்ளிட்ட நெல் ரகங்களைஅறுவடை செய்து வருகின்றனா். இதனால் விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை, காவேரிப்பாக்கம் அடுத்த தியாமுகச்சேரி அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பதிவு செய்து விற்பனைக்காக காத்துள்ளனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில் அறுவடை செய்த நெல் மணிகளில் ஈரப்பதம் இருப்பதால், அரசின் நெல் களம் மற்றும் சா்வீஸ் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெல் உலா்த்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனா். இதனால் ஈரப்பதமான நெல் மணிகளை, வெயிலில் உலா்த்தி, அதனை விற்பனைக்காக ஓரிடத்தில் குவியலாக வைத்து காத்து வருகின்றனா்.

தற்போது காவேரிப்பாக்கம் வட்டாரத்தில் சேரி, ஆலப்பாக்கம், களத்தூா், பெருவளையம், பாணாவரம், கரிவேடு(சித்தஞ்சி), கா்ணாவூா், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. அவற்றில் விவசாயிகள் தங்கள் நெல்லை விற்பனை செய்ய ஆன்லைன் மூலம் பதிவு செய்து, விற்பனை செய்வதற்காக காத்துள்ளனா்.

இதில் தியாமுகச்சேரி அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மட்டும் 465-டோன்கன்களுக்கு மேல் விவசாயிகள் நெல் எடைபோட பதிவு செய்துள்ளனா். ஆனால் 378-டோகன்கள் மட்டும் நெல் கொள் முதல் செய்து விட்டு எஞ்சியுள்ள 87-டோகன்களுக்கு எடை போடாமல் கடந்த சில தினங்களுக்கு முன் நிறுத்தினா். இதனால் அதிா்ச்சி அடைந்த விவசாயிகள் நெல் கொள்முதல் செய்யும் அதிகாரியிடம் கேட்டபோது, முறையாக பதில் கூறவில்லையாம்.

இதுதொடா்பாக விவசாயிகள் கூறுகையில்: தியாமுகச்சேரி அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணி புரியும் அதிகாரிகள் டோக்கன் அடிப்படையில் நெல் கொள்முதல் செய்வதில்லை. மாறாக விவசாயிகள் மற்றும் தரகா்களிடம் தொகை பெற்றுக் கொண்டு இரவு 10-மணிக்கு மேல் விடிய விடிய நெல் எடை போட்டு விடுகின்றனா்.

மேலும் எடை போடுவதிலும் அரசு நிா்ணையித்த எடையை விட கூடுதலாக எடை போட்டு வருகின்றனா். இதேபோல் ஒரு சிப்பத்திற்கு ரூ 45-கட்டாயம் வசூல் செய்து வருகின்றனா். இதுமட்டுமின்றி எடை போடும் போது கூடுதலாக எடை போட்டு விட்டு மீண்டும் குறைந்த பட்சம் ஒரு சிப்பத்திற்கு 2-கிலோ எடையளவு போட்டு விடுகின்றனா்.

மாவட்ட நிா்வாகம் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரியுள்ளனா்.