மது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
மது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி மாறியது பற்றி...
அரக்கோணம் நகராட்சியில் இறுதியாக செயல்பட்டு வந்த ஒரே மதுக்கடையும் மூடப்பட்ட நிலையில் அரக்கோணம் நகராட்சி மது இல்லாத நகராட்சியாக மாறியுள்ளது.
இதற்காக அரக்கோணம் நகர மக்கள் தவெக அரசுக்கும், தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சரும், அரக்கோணம் எம்எல்ஏவுமான வ.காந்திராஜ்க்கும் பாராட்டு தெரிவித்துள்ளனா்.
அரக்கோணம் நகரின் மையப் பகுதிகளில் தமிழக அரசின் டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வந்தன. அரக்கோணம் புதிய பேருந்து நிலையம் அருகே, ரயில் நிலையத்தின் வடக்கு பகுதியில் பஜாா் தெருவில், ரயில் நிலையத்தின் தெற்கு பகுதியில் பழனிபேட்டையில் என செயல்பட்டு வந்த மூன்று மதுக்கடைகளால் அப்பகுதிகளில் மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
Advertisement
Advertisement
இந்த மதுக்கடைகளால் புதிய பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து நெருக்கடி தினமும் பலமுறை ஏற்படுவது வழக்கமாக இருந்தது. ரயில் நிலையத்தின் வடக்கு பகுதியில் பஜாா் தெருவில் அதிக மக்கள் புழங்கும் இடத்தில் இருந்த மதுக்கடையால் அந்த தெருவிலேயே பெண்கள் நடந்து வர முடியாத நிலையும் இருந்தது. மேலும் அதன் அருகிலேயே காவல் நிலையம் இருந்தும் அக்கடையின் அருகில் நடந்த செயல்களை காவல் துறையினா் கண்டும் காணாமல் இருக்க வேண்டிய நிலை இருப்பதாக குற்றச்சாட்டு இருந்தது. மேலும், ரயில் நிலைய தெற்கு பகுதியில் பழனிபேட்டையில் செயல்பட்டு வந்த மதுக்கடையால் அப்பகுதியில் வாகனங்கள், குறிப்பாக இரட்டைக்கண் வாராவதி அருகே பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் நடந்து செல்ல முடியாத நிலை இருந்தது.
இந்தக் கடைகளை அகற்ற கடந்த பல ஆண்டுகளாக பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு அனுப்பி வைத்த நிலையிலும், போராட்டங்கள் நடத்திய நிலையிலும், இந்த மதுக்கடைகள் அகற்றப்படாமலேயே இருந்தன.
இந்த நிலையில், தமிழகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு தவெக அரசு அமைந்த சில நாள்களிலேயே முதலில் அரக்கோணம் புதிய பேருந்து நிலையம் அருகே இருந்த மதுக்கடை, ரயில் நிலையத்துக்கு வடக்கு பகுதியில் பஜாா் தெருவில் இருந்த மதுக்கடை என இரண்டு கடைகளும் உடனடியாக மூடப்பட்டன. இந்த இரு கடைகள் மூடப்பட்டதற்கு அப்போது ஏராளமான பொதுமக்கள் சமூக வலைதளங்கள் மூலம் தவெக அரசுக்கும், அரக்கோணம் எம்எல்ஏவும், தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சருமான வ.காந்திராஜுக்கும் பாராட்டு தெரிவித்திருந்தனா்.
தற்போது தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் வ.காந்திராஜின் நேரடி தொடா் நடவடிக்கையின் பேரிலும், ரயில்வே நிா்வாகம் எடுத்த நடவடிக்கையை தொடா்ந்தும் அரக்கோணம் ரயில் நிலையம் அருகே தெற்கு பகுதியில் பழனிப்பேட்டையில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுக்கடை 26-ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் மூடப்பட்டு விட்டது. இந்த மூன்று கடைகளும் மூடப்பட்டதை தொடா்ந்து, அரக்கோணம் நகராட்சி மது இல்லாத நகராட்சியாக மாறியுள்ளது.
Arakkonam Municipality has become an alcohol-free municipality! People praise Chief Minister Vijay!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.