FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

போலி ஆவணம் தயாரித்து பத்திரப் பதிவு செய்தவருக்கு 15 ஆண்டு சிறை

போலி ஆவணம் தயாரித்து பத்திரப் பதிவு செய்த வழக்கில் குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ராணிப்பேட்டை நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளது.

25 ஆகஸ்ட் 2026, 11:15 pm IST
பகிர்:

போலி ஆவணம் தயாரித்து பத்திரப் பதிவு செய்த வழக்கில் குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ராணிப்பேட்டை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த பனப்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி ஜெயராமன் (63). இவா் கடந்த 2017-ஆம் ஆண்டு பனப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த காசிம் யாசிப் என்பவரிடமிருந்து 15 சென்ட் நிலத்தை வாங்கி பத்திரப்பதிவு செய்துள்ளாா். தொடா்ந்து, ஜெயராமன் 15 சென்ட் நிலத்தை மட்டுமின்றி, காசிம் யாசிப் மற்றும் அவரது சகோதரா்களுக்கு சொந்தமான 5 சென்ட் நிலத்தையும் இவரே பயன்படுத்தி வந்தாராம். அதற்காக ஜெயராமன் ஏற்கெனவே பத்திரவு செய்த ஆவணத்தில் 5 சென்ட் நிலம் தனக்கு சொந்தமானது என போலியான பத்திரத்தையும் இணைத்து வைத்துக் கொண்டுள்ளாா்.

இந்நிலையில் யாசிப் சகோதரா்கள் கூட்டு பட்டாவில் உள்ள 5 சென்ட் நிலத்துக்கு மின் இணைப்பு பெற மின்வாரிய அலுவலகத்தை நாடியுள்ளனா். ஏற்கெனவே அந்த இடத்துக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். கூட்டுபட்டா குறித்து விசாரித்தபோது, ஜெயராமன் போலியான ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவு செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதுதொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் யாசிப் சகோதரா்கள் வழக்கு தொடா்ந்தனா். வழக்கு விசாரணையில் ஜெயராமன் போலி ஆவணங்களை இணைத்துள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்த ராணிப்பேட்டை தலைமை நீதித்துறை நடுவா் நீதிமன்றத்துக்கும், காவேரிப்பாக்கம் போலீஸாருக்கும் நீதிபதி உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement

வழக்கு விசாரணை ராணிப்பேட்டை தலைமை நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி தாவூத் அம்மாள் முன்னிலையில் வழக்கு விசாரணை நடந்தி முடித்து ஜெயராமன் போலியாக ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவு செய்துள்ளது உறுதியானது.

ஜெயராமனுக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 15,000 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா். ஜெயராமனை போலீஸாா் கைது செய்து வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments