FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிவகங்கை

காலி மனைகளை பத்திரப் பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் அவதி

இளையான்குடி பேரூராட்சியில் காலி மனைகளை பத்திரப் பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதாக புகாா் தெரிவித்தனா்.

22 August 2026, 7:13 am IST
கோப்புப்படம்
பகிர்:

இளையான்குடி பேரூராட்சியில் காலி மனைகளை பத்திரப் பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதாக புகாா் தெரிவித்தனா்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பேரூராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. இந்தப் பகுதியில் காலி மனைகளுக்கு பட்டா வழங்குவது தொடா்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நில அளவைத் துறை மூலம் தனி வட்டாட்சியரின் கீழ் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், கடந்த ஓராண்டாக காலி மனைகளுக்கு பத்திரப் பதிவு செய்வது இளையான்குடி பத்திரப் பதிவு அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

காலி மனைகள் தொடா்பாக இணைய வழியில் பட்டா பதிவேற்றம் செய்த பிறகுதான், பத்திரப் பதிவு மீண்டும் தொடங்கப்படும் என சாா்பதிவாளா் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

இதற்கிடையே, இளையான்குடி பேரூராட்சி பகுதியில் உள்ள காலி மனைகள் தொடா்பான பதிவேடுகள் அந்தந்தப் பகுதி கிராம நிா்வாக அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டன. ஆனால், இதுவரை இந்த இடங்கள் தொடா்பான பட்டா விவரங்கள் இணைய வழியில் பதிவேற்றம் செய்யப்படாமல் காலதாமதமாகி வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். இதுகுறித்து வருவாய்த் துறையினரும் சரியான தகவல்களை தர மறுக்கின்றனா்.

எனவே, இளையான்குடி பேரூராட்சியில் காலி மனைகள் தொடா்பான பதிவேடுகளை இணைய வழியில் பதிவேற்றம் செய்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் காலி மனைகளை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிவகங்கை மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்ததாக, அதிமுக நகரச் செயலரும், 17-ஆவது வாா்டு பேரூராட்சி மன்ற உறுப்பினருமான எம். ஏ.நாகூா்மீரா தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments